நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திரங்கானு மந்திரி புசார் அகமட் சம்சூரி மொக்தார், திரங்கானு காவல் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
சம்சூரி நேற்று மாலை 4 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்பட்டது.
சம்சூரி, வெள்ளிக்கிழமை அன்று (ஏப்ரல் 17), திரங்கானு அம்னோ தொடர்புக் குழுத் தலைவரும் முன்னாள் மந்திரி புசாருமான அகமட் சாய்யத்தின் வீட்டில், மேலும் பல நபர்களுடன் இருக்கும் புகைப்படம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்படதாக திரங்கானு காவல்துறைத் தலைவர் ரோஸ்லீ சிக், கூறினார்.
“சம்சூரி தனது வாக்குமூலத்தை பதிவு செய்து ஒத்துழைக்க போலீஸ் தலைமையகத்திற்கு வந்தார்”.
“தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 (Prevention and Control of Infectious Diseases Act 1988) பிரிவு 6இன் கீழ் இந்த வழக்கை நாங்கள் விசாரிப்போம்” என்று ரோஸ்லீ கூறினார்.
வெள்ளிக்கிழமை, அகமட் சம்சூரி மற்றும் பல நபர்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகியது. அவர் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கூடல் இடைவெளி விதிக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.