CAP: கோவிட்-19 சோதனைக் கட்டணத்தை செலுத்த பெர்கேசோ நிதியை பயன்படுத்துவதா?

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் பணியாற்ற வேண்டிய அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களின் கோவிட்-19 பிணிப்பாய்வுக் கட்டணத்தை சமூக பாதுகாப்பு அமைப்பு பெர்கேசோ (Perkeso) ஏற்கும் என்பது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) அதிர்ச்சியடைந்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பணியாற்ற அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான கோவிட்-19 கட்டாய பிணிப்பாய்வு (ஸ்கிரீனிங்) சோதனைக்கு பணம் செலுத்த பெர்கேசோ (Perkeso) நிதி பயன்படுத்தப்படும் என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை (Miti) அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சமீபத்தில் அறிவித்தார்.

“கோவிட்-19இன் கட்டாயத் சோதனையை நாங்கள் வரவேற்கிறோம் என்றாலும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளின் நலனுக்காக பணிபுரியும் போது ஆபத்துக்களைப் பெறுவதால், அவர்களின் முதலாளிகளே அச்செலவை ஏற்க வேண்டும்”.

“மேலும், தொழிலாளர்களுக்கு ‘இடர் நிதி ஒதுக்கீடும்’ (elaun risiko) வழங்கப்பட வேண்டும்” என்று CAP தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனைக் கட்டணத்திற்கு நிதியுதவி செய்ய பெர்கேசோவை (Perkeso) பயன்படுத்துவதற்கான முடிவு ஆபத்தானது. பணியிட விபத்துகள், அவசரநிலைகள், தொழில்சார் நோய்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் இறப்பு போன்ற முக்கிய அம்சங்களுக்கு அந்நிறுவனம் பாதுகாப்பு வழங்குவதை முக்கியமாக கருத வேண்டும்.

கோவிட்-19 நெருக்கடி முடிந்த பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று மொஹிதீன் கூறினார்.

எனவே, தொழிலாளர்களின் நிதியை, பெர்கேசோ (Perkeso) அவர்களின் அனுமதியின்றி இத்தகைய சோதனைகளுக்காக செலவிடுவது நெறிமுறையற்றது மற்றும் விவேகமற்றது என்றார்.

மலேசிய தொழிற்சங்கத்தின் (MTUC) நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த CAP-ன் பதிவு உள்ளது. முன்னதாக, பெர்கேசோவின் (Perkeso) முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்றும் பெர்கேசோவின் அசல் நோக்கத்தை அஸ்மின் மறந்துவிட்டதாகவும் MTUC குற்றம் சாட்டியது.

“பெர்கேசோ (Perkeso), சுமார் 7 மில்லியன் செயலில் உள்ள தொழிலாளர்களுக்கு (2017 நிலவரப்படி) சொந்தமானது; பொறுப்பானது என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவோம்”.

“அந்த 7 மில்லியன் தொழிலாளர்களின் நிதியைப் இப்படி வெறுமனே பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்று மொஹிதீன் கூறினார்.

தொழிலாளர்கள் தங்கள் சொந்த கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனைக் கட்டணங்களையும் செலுத்தி, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது வேலைக்கும் சென்று, இதனால் கிருமி பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துக் கொள்வது என்பது அர்த்தமற்ற ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார்.

‘இடர் நிதி ஒதுக்கீடு’ (elaun risiko) என்பது பல நாடுகளில் தொழிலாளர் சலுகைகளின் ஒரு அம்சமாகும், இது மலேசியாவில் 2013 இல் முன்மொழியப்பட்டது என்றார்.

“தொழிலாளர்கள் அசாதாரண சூழ்நிலைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதால் இதுபோன்ற நிவாரண நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது முக்கியம்” என்று அவர் கூறினார்.