கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஐந்து நாள் அடைக்கப்பட்ட பின்னர் கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இருப்பினும், நாட்டின் மிகப் பெரிய உணவு சந்தையாக விளங்கும் இச்சந்தையில் இன்று ஒரு சில வியாபாரிகள் மட்டுமே மீண்டும் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் விதித்த கடுமையான நிபந்தனைகள் அவற்றின் முக்கிய தடையாக அமைந்துள்ளது. மொத்த விற்பனையாளர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் சுகாதார சான்றிதழை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
216 காய்கறி கடைகளில் 65 மட்டுமே திறக்கப்பட்டுள்ளன என்று கோலாலம்பூர் காய்கறி மொத்த விற்பனை சங்கத்தின் செயலாளர் லாவ் டெக் கிம் தெரிவித்துள்ளார். மொத்த விற்பனையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே இன்று வியாபாரம் செய்கிறார்கள்.
“உரிமம் பெற்ற அனைத்து மொத்த விற்பனையாளர்களில், 110 பேர் மட்டுமே இன்று செயல்பட தகுதியுடையவர்கள், ஏனெனில் அவர்கள் கோவிட்-19 பிணிப்பாய்வு (ஸ்கிரீனிங்) சோதனைக்குப் பிறகு 14 நாட்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்துள்ளனர்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“ஒரு (தற்காலிக) பாஸ் வழங்கப்படுவதற்கு முன், கோவிட்-19 குறித்த சுகாதார சான்றிதழ் அறிக்கையை நாங்கள் எடுக்க வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் கூறியுள்ளது. எங்கள் உறுப்பினர்கள் இன்னும் அவர்களின் பாஸைப் பெற தீவிரமாக முயன்று வருகிறார்கள், சிலர் இன்னும் தங்கள் ஊழியர்களுக்கான சுகாதார சான்றிதழ் அறிக்கைகளைப் பெறவில்லை.”
தங்கள் ஊழியர்கள் சந்தைக்கு அருகில் இருக்கும் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) பகுதியில் இருப்பதால், தகுதிவாய்ந்த சில மொத்த விற்பனையாளர்கள் தங்கள் வணிகத்தைத் தொடங்க முடியாமல் உள்ளனர் என்று லாவ் கூறினார்.
“எனது சூழ்நிலையை எடுத்துக்கொண்டால், எனக்கு சுகாதார சான்றிதழ் கிடைத்துவிட்டது. ஆனால் என்னால் வியாபாரத்தைத் தொடங்க முடியவில்லை. எனது ஐந்து ஊழியர்களும், கூட்டாளரும் தீவிர கட்டுப்பாட்டினால் வீட்டை விட்டு வெளிவர முடியவில்லை”.
“என்னால் தனியாக கடையை நடத்த முடியாது. 50 கிலோ எடையுள்ள ஒரு காய்கறி கூடையை என்னால் எப்படி தூக்க முடியும்?” என்றார்.
சந்தையில் உள்ள தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்றும் அவர் விளக்கினார்.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேவையையும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் விதித்துள்ளது. இன்று காலை 6.30 மணிக்கும் நிருபர்கள் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
“கோவிட்-19 குறித்து பலருக்கு மருத்துவ சான்றிதழ் அறிக்கைகள் இல்லாததால், இது எங்களின் பல விநியோகிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தடையாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
சந்தையில் 90 சதவீதம் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் லாவ் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து இச்சந்தைக்கு வரும் காய்கறிகள் குறைந்துள்ளாதால், கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மக்கள், வரும் நாட்களில் குறைந்த வகையான காய்கறிகளை மட்டுமே காண வேண்டும் என்றார்.
“மாலையில் நான் பச்சை காய்கறிகளை மட்டுமே பார்த்தேன். சில மணிநேரங்களுக்குப் பிறகு, கேமரன் மலை மற்றும் நாட்டின் பிற இடங்களிலிருந்து வேறு வகையான காய்கறிகள் வந்தன. ஆனால் சீனா, தாய்லாந்திலிருந்து காய்கறிகள் எதுவும் இறக்குமதி செய்யப்பட்ட அறிகுறிகள் இல்லை”
Lembaga Pemasaran Pertanian Persekutuan (Fama)-வின் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, கோலாலம்பூரின் கெப்போங்கில் உள்ள சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பச்சை காய்கறிகள் ஜனவரி மாதத்தில் சராசரி விலையை விட மூன்று மடங்கு அதிகமான விலையில் விற்கப்படுவதைக் காணமுடிந்தது.
பொதுவாக பயன்படுத்தப்படும் பச்சை கடுகுக்கீரை ஒரு கிலோ RM12-க்கு விற்கப்படுகிறது. இது ஜனவரி மாதம் கோலாலம்பூர் பகுதியில் ஒரு கிலோ RM3.83 என்ற விலையில் இருந்தது என்று Fama-வின் தரவு தெரிவித்துள்ளது.