கிராமத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பும் மக்கள் Gerak Malaysia இயங்கலை விண்ணப்பத்தை செய்யலாம்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்பினால், கெராக் மலேசியா (Gerak Malaysia) இயங்கலை (ஆன்லைன்) விண்ணப்பத்தின் மூலம் நாளை தொடங்கி விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், கெராக் மலேசியா இயங்கலை வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம் என்றார் மலேசிய போலீஸ் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஹுசிர் முகமட்.

இருப்பினும், கெராக் மலேசியா பயன்பாட்டின் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஹுசீர் கூறினார்.

ஏப்ரல் 26 அன்று விண்ணப்பித்தவர்கள், தாங்கள் செல்லும் இடத்தை உறுதிப்படுத்த மீண்டும் ஏப்ரல் 29 தங்களின் விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“மே 1 ஆம் தேதி, அவர்கள், விண்ணப்பத்தின் முடிவை தெரிந்துகொள்ளலாம்”.

“அனுமதிக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான பயணத்தின் காலம் மே 1 முதல் 3 வரை ஆகும். சாலை பயனர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பொது கழிப்பறைகள் மட்டுமே இயங்குகின்றன
ஏப்ரல் 23-ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், மாநிலத்தின் எல்லை தாண்டிய பயண அனுமதி கிராமத்தில் சிக்கியவர்களுக்கு மட்டுமே என்று அறிவித்தார்.

மார்ச் 16 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது அச்சமயத்திலோ பலர் கிராமத்திற்குத் திரும்பி, இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிக்கித் தவிப்பதனால் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த அனுமதி, உயர்கல்வி வளாகத்தில் உள்ள மாணவர்கள் வீடு திரும்புவதற்காக அளிக்கப்பட்ட அனுமதியிலிருந்து வேறுபட்டது.
மாணவர்களின் உடல்நிலை குறித்து நிர்வாகத்திற்குத் தெரிந்திருப்பதால் அவர்களை கூட்டாமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

கூடுதலாக, பிளஸ் (Plus) நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்கள், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் பயணிப்பதால், நெடுஞ்சாலை பகுதிகளில் உணவு வசதிகள், இளைப்பாறும் இடங்கள் (R&R) வழங்கப்படாது எனவும், மசூதிகளும் மூடப்படும் எனவும், பொது கழிப்பறை வசதிகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் ஹுசிர் எச்சரித்தார்.

பயணத்தின் போது எந்தவொரு கட்டிடம், திறந்தவெளி, வாகன நிறுத்துமிடம் அல்லது வேறு எந்தவொரு இடத்திலும், பகுதிகளில் எந்தவொரு குழு நடவடிக்கைகள் அல்லது தொழுகை நடவடிக்கைகளையும் நடத்த நெடுஞ்சாலை பயனர்களுக்கு அனுமதி இல்லை.

வாகன நிறுத்துமிடம் ஓய்வு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட முடியும், அதே நேரத்தில் கழிப்பறைக்கு செல்வதைத் தவிர வாகனத்தை விட்டு வெளியேற அனுமதி இல்லை.

இதற்கிடையில், பெட்ரோல் நிலையம் நெடுஞ்சாலையில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை மட்டுமே இயங்கும் என்று ஹுசிர் கூறினார்.

கெராக் மலேசியா விண்ணப்ப பதிவு நடைமுறை குறித்து இன்று ஒரு ஊடக அறிக்கை வெளியிடப்படும் என்றும், அதன்பிறகு ஏப்ரல் 29-ம் தேதி மாநில அடிப்படையிலான இயக்க நடமாட்டங்கள் குறித்து மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாகவும் கூறினார். இது, சம்பந்தப்பட்ட பயணங்கள் சீராகவும் ஒழுங்காகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும் என்றார் ஹுசிர்.