நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள், தண்டனைக்காக சிறப்பு சிறைச்சாலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னர் அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் 11 சிறப்பு சிறைகளை ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு சிறைச்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன”.
“இன்றுவரை, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியததற்காக 58 நபர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அவர்கள் தற்காலிகச் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய கைதிகளை ஏற்கனவே இருக்கும் கைதிகளுடன் வைத்தால், புதிய கோவிட்-19 கிளஸ்டர் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத் துறை தங்கள் கவலையை தெரிவித்ததையடுத்து இந்த சிறப்பு சிறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதோடு, இப்போது உள்ள சிறைச்சாலைகள் ஏற்கனவே நெரிசலாகவும் உள்ளன.
ஆரம்பத்தில் 13 தற்காலிக சிறைச்சாலைகள் திறக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது, ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கையை 11 ஆக குறைத்தது.
தற்காலிக சிறைகள் தற்போதுள்ள சிறைச்சாலைகளை விட ‘சிறந்ததல்ல’ என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய கைதிகள் சிறைச்சாலையில் உள்ள மற்ற சிறைக்கைதிகளைப் போலவே நடத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
தொற்று நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிக்குள் நடவடிக்கைகள்) 2020 (Peraturan-peraturan Pencegahan Dan Pengawalan Penyakit Berjangkit (Langkah-langkah Di Dalam Kawasan Tempatan Jangkitan) 2020 இன் பிரிவு 7(1) இன் கீழ், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் நபருக்கு அதிகபட்சம் RM1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.