ஒழுங்கற்ற பிணிப்பாய்வு சோதனை: சிட்டி ஒன் குடியிருப்பாளர்கள் அதிருப்தி

கோலாலம்பூர் மேனாரா சிட்டி ஒன்னில் வசிப்பவர்கள், நேற்று நடத்தப்பட்ட வெகுஜன பிணிப்பாய்வு சோதனை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் விளக்கத்தையும் அவர்கள் எற்க மறுத்தனர்.

சில குடியிருப்பாளர்கள் அழைக்கப்படாமலும் சோதனைக்குச் சென்றதால், அங்கு கூடல் இடைவெளியை கடைபிடிக்க சாத்தியமில்லாமல் போனது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறியிருந்தார்.

“நாங்கள் அறிக்கைகளைப் பார்க்கும்போது, சோதனை குறித்த அறிவிப்பு தொகுதி A-வுக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால் டவர் B குடியிருப்பாளர்களும் கீழே உள்ள சோதனை தளத்திற்கு வந்துள்ளனர். எனவே நெரிசல் ஏற்பட்டது” என்று இன்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இருப்பினும், அங்கு வசிப்பவர்கள் இது உண்மை இல்லை என்று உடனடியாக ஒரு அறிக்கையில் பதிலளித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வெகுஜன பிணிப்பாய்வு சோதனைகளை ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட்டனர் என்று அவர்கள் கூறினர்.

“சுகாதார அமைச்சு சோதனைகளை நடத்திய விதத்தில் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைகிறோம். நேற்று 12வது சோதனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர முடிகிறது. சாத்தியமான பரவலை பொருட்படுத்தாமல், சுகாதார அமைச்சு ஊழியர்கள் பல்வேறு பிரிவுகள் மற்றும் மட்டங்களில் வசிப்பவர்களை பொது இடங்களில் ஒன்றாக வருமாறு கேட்டுக் கொண்டனர்.”

“பல பிளாக் B குடியிருப்பாளர்கள் நேற்று பிளாக் A குடியிருப்பாளர்களுக்கான சோதனையின் போது வந்ததாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறியதை நாங்கள் மறுக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

ஆயுதமேந்திய போலீசாருடன் அமைச்சக ஊழியர்கள் ஒவ்வொரு குடியிருப்பு பிரிவின் கதவையும் தட்டினர்.

அதன் பிறகு, குடியிருப்பாளர்கள் வரிசையில் கட்டிடத்தில் செயல்படும் நான்கு மின்தூக்கிகளுக்காக நின்றுள்ளனர். மேலும் இங்கு கூடல் இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நூர் ஹிஷாம் எதிர்காலத்தில் வெகுஜன பிணிப்பாய்வு சோதனைகள் விதிகளின்படி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இதுபோன்ற முறைகேடுகள் பல முறை ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க அமைச்சு, வீடு வீடாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

“குடியிருப்பாளர்களை அதிக எண்ணிக்கையில் கூட்டி சோதனைகளுக்கு வருமாறு கேட்பது கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது” என்று அவர்கள் கூறினர்.