நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிதாயாவுக்கு எதிராக விசாரணை ஆவணங்களைத் திறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
“விசாரணையில், நூருல்ஹிதாயா, பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் மற்றும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் மஸ்ரிசால் முகமட் ஆகியோருடன் ஒரு சந்திப்பு தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார் என்று தெரிகிறது.
“விசாரணை முடிந்ததும், காவல்துறை விசாரணை ஆவணங்களை அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பும்” என்று மலேசிய போலீஸ் குற்ற புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஹுசிர் முகமது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269-ன் கீழ் – உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்கூடிய அலட்சிய செயல்களுக்காக – மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2020 விதி 3(1)-ன் கீழ் – சட்டவிரோத நடமாட்டத்திற்காகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஹுசிர் கூறினார்.
புகைப்படத்தை பதிவேற்றிய நூருல்ஹிதாயாவின் நடவடிக்கை, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக பரவலான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.