தொகுதிக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், பெரிக்காத்தான் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன – எம்.குலசேகரன்

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சமூக நலத்துறையால் (JKM) தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அந்த உணவு நன்கொடைகள், உண்மையிலேயே பி40 பிரிவில் உள்ள குடும்பங்களை அடைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார் குலசேகரன்.

“இந்த கட்சிகள் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது”.

“மிக முக்கியமாக, இந்த அத்தியாவசிய பொருட்கள் ஏன் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சேரவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 1000 வீடுகளுக்கு உணவு கூடைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை சமூக நலத்துறையின் மூலம் பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில், விநியோகத்தின் செயல்முறை சீரற்று உள்ளது எனக் கூறப்படுகிறது.

சமூக நலத்துறை ஒவ்வொரு தொகுதியின் பிரதிநிதிகளையும் தொடர்புகொண்டு உணவு கூடை பெறுபவர்களின் பெயர்களின் பட்டியலை கேட்கும் என்று ஏப்ரல் 13ம் தேதி, மலேசியாகினி செய்தியை வெளியிட்டது.

இருப்பினும், சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தங்களுக்கு உணவு கூடை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். சிலர் இது இன்னும் மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று கூறினர்.

விநியோக செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று குலசேகரன் கூறினார்.

இதற்கிடையில், 1,500 குடும்பங்கள் உணவுப் பொருட்களின் உதவிக்காக தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அவரது குழு சுமார் 200 குடும்பங்களுக்கு உதவியதாகவும் அவர் கூறினார்.

“தினமும் 1,500 குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அயராது உழைப்பதை நாங்கள் ஆதரித்து உதவுகிறோம்.”

“ஆனால், மத்திய அரசிடமிருந்து மட்டுமே வரக் கூடிய நிதி மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையினால், இந்த கடுமையான நேரத்தில் பல குடும்பங்களும் குழந்தைகளும் ஒவ்வொரு இரவும் பட்டினியுடனே உறங்குகின்றனர்,” என்று அவர் கூறினார்.