பி.கே.ஆர். கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் அபிப்

அவருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செபெராங் ஜாயா சட்டமன்ற உறுப்பினரான தனக்கு, வெள்ளிக்கிழமை அன்று இடைநீக்கக் கடிதம் கிடைத்ததாகக் கூறினார்.

இருப்பினும், நேற்று இரவு அபிப் பகிர்ந்து கொண்ட அக்கடிதத்தின்படி, மார்ச் 21 அன்று பி.கே.ஆர் உச்ச கவுன்சில், அம்முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எதிர்பார்த்தபடி, எனக்கு ‘எந்தக் காரணமும் இன்றி’ இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு கிடைத்துள்ளது”.

இதற்கிடையில், இன்று அவரை தொடர்பு கொண்டபோது, தான் இடைநீக்கம் செய்யப்பட்ட முடிவு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

“இது ஒரு நியாயமான செயல் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.

இருப்பினும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு மேல்முறையீடு செய்வாரா அல்லது பி.கே.ஆரை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இப்போது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில சட்டமன்றத்தில் பணியாற்றுவதில் தனது கவனம் உள்ளது என்று அபிப் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு சூழ்நிலையுடன், எனது பகுதிக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது.”

தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்காக பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றில் சேர அஸ்மின் பி.கே.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், அபிப் மீது ஒழுங்கு விசாரணையைத் தொடங்கியது பி.கே.ஆர்.

“ஷெரட்டன் நகர்வு” என்று அழைக்கப்படும் அஸ்மினின் நடவடிக்கைகள், 2018 இல் 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக மாறிய பக்காத்தான் ஹராப்பானின் சரிவுக்கு வழிவகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.