இறக்குமதி செய்யப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தோனேசியாவிலிருந்து வந்தவை என்று சுகாதார அமைச்சு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலேசியர்களை கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியதில் இருந்து, அவர்களில் 139 பேர் கோவிட்-19-க்கு நேர்மறையாக இருப்பது தெரியவந்தது என்றார் சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.
இவர்களில், 99 பேர் இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய மலேசியர்கள் ஆவர். இது தனிமைப்படுத்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகளில் 71.22 சதவீதம் ஆகும்.
மீதமுள்ள பாதிப்புகள் இங்கிலாந்தில் இருந்து 14-ம், சிங்கப்பூரிலிருந்து 13-ம், துருக்கியில் இருந்து 5-ம், நெதர்லாந்தில் இருந்து 3-ம், அமெரிக்காவிலிருந்து 2-ம் மற்றும் தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் பங்களாதேஷில் இருந்து முறையே ஒன்றும் பதிவாகியுள்ளன என்று நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.
இன்றுவரை, தனிமைப்படுத்தலின் கீழ் 12,672 நாடு திரும்பியவர்கள் பிணிப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நூர் ஹிஷாம் இன்று நண்பகல் நிலவரப்படி, தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பகுதிகளில் 21,466 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் 638 பேர் நோய்க்கு நேர்மறையானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது என்றார்.
அவர்களில் 388 பேர் அல்லது 61 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்றும் மீதமுள்ள 250 பாதிப்புகள் அல்லது 39 சதவீதம் மலேசியர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
மதப் பள்ளிகளில், நேற்றைய நிலவரப்படி 6,229 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 341 பேர் நேர்மறையானவர்கள் என தெரிகிறது.
இன்று நண்பகல் நிலவரப்படி, இதுவரை மொத்தம் 5,780 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், 3,862 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் 1,820 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உலகளவில், 2.93 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 203,596 பேர் இறந்துள்ளனர்.

























