கட்சித்தாவலுக்கான அழைப்பை நிராகரித்த பி.பிரபாகரன்

பி.கே.ஆர். கட்சியை விட்டு வெளியேற அழைக்கப்பட்டதை பத்து எம்.பி. பி.பிரபாகரன் இன்று உறுதிப்படுத்தினார். பி.கே.ஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அபிப் பகார்டின், இந்த அழைப்பை விடுத்ததாக பி.பிரபாகரன் கூறியுள்ளார்.

மலேசியாகினியிடம் பேசிய பிரபாகரன், கெராக்கன் கட்சியில் இணைய அபிப் அளித்த வாய்ப்பை தான் நிராகரித்ததாக கூறினார்.

பி.கே.ஆருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று பிரபாகரனும் ஒரு தனி அறிக்கையை வெளியிட்டார்.

“பேராக் பி.கே.ஆர். தலைவர், சகோதரர் பர்ஹாஷ் வாபா சால்வடோர் ரிசால் முபாரக் கூறியபடி, எனக்கும் டாக்டர் அபிப்புக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்தது உண்மைதான்.”

“எனது நிலைப்பாடும் கொள்கைகளும் பி.கே.ஆர். கட்சி கொள்கைகளுக்கு சமமானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியல் பிரச்சினைகள் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. மக்களுடன் எனது போராட்டத்தைத் தொடர்வதற்காக நான் பி.கே.ஆர். கட்சியுடன் தொடர்ந்து இருப்பேன்.”

தொடர்பு கொண்டபோது, அபிப் இக்குற்றச்சாட்டை ஏற்க மறுப்பதாகக் கூறினார்.

“இந்த கடினமான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது எனது கவனம் எனது வாக்காளர்கள் மீது மட்டுமே உள்ளது” என்று செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான அபிப் மலேசியாகினியிடம் கூறினார்.

அபிப்புடனான சந்திப்புக்கு முன்னர், அவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளும் இருந்தன என்றும் பிரபாகரன் கூறினார்.

பத்து பி.கே.ஆர். கிளையில் இருந்து ஒரு தலைவர் இதற்காக ஏற்பாடுகளை செய்த பல கூட்டங்கள் உள்ளன என்றார்.
“எல்லாமே அரசியல் சதுரங்க ஆட்டங்கள். எல்லோரும் நான் கட்சித்தாவ வேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

‘அருவருப்பான அரசியல்’ நிறுத்தப்பட வேண்டும் என்றும், 15வது பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வாரென்றும் பிரபாகரன் கூறினார்.

பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை தோற்கடிக்க உதவிய முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவர் அஸ்மின் அலியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் அபிப்.

பி.கே.ஆரில் இருந்து ஒரு குழு எம்.பி.க்களை அஸ்மின் வழிநடத்தினார். பெர்சத்து கட்சியின் முகிதீன் யாசின் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, அவர்கள் ஒரு புதிய தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்தனர்.