குளுவாங், சிம்பாங் ரெங்காமில் உள்ள கம்போங் டத்தோ இப்ராஹிம் மஜித் மற்றும் பண்டார் பாஹாரு டத்தோ இப்ராஹிம் மஜித் ஆகிய இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் (பி.கே.பி.டி) 28 ஏப்ரல் 2020, நாளையோடு முடிவடையும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“இதனால், சிம்பாங் ரெங்கம் பி.கே.பி.டி.யில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் போன்றவை நீக்கப்படும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 27 முதல் இந்த இரண்டு குடியிருப்புகளும் பி.கே.பி.டி-யின் கீழ் வைக்கப்பட்டன. அங்கு குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது இப்பகுதிக்குள் நுழையவோ தடை விதிக்கப்பட்டது.
இவ்விரண்டு பகுதிகளிலும் 650 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,570 பேர் உள்ளனர்.
இருப்பினும், மார்ச் 29 ஆம் தேதி சிலாங்கூரின் சுங்கை லூயியில் தொடங்கிய பி.கே.பி.டி, மே 5 வரை நீட்டிக்கப்பட்டது.
இதுவரை நடைமுறையில் உள்ள பிற பி.கே.பி.டி பகுதிகள் கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலாயன் மேன்ஷன், மற்றும் செலாயாங் மொத்த விற்பனை சந்தை ஆகும்.