இன்று இரவு தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 1,128 மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“இதில் ஒன்பது பல்கலைக்கழகங்கள், 49 பேருந்துகள் மற்றும் 17 இலக்கு இடங்கள் அடங்கியுள்ளன”.
“பயணத்தின் மூன்று மணி நேரத்திற்கு முன்னர் பேருந்துகள் கிருமிநாசினி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நாளை காலை 9 மணியளவில் மாணவர்கள் இறங்கும் இடத்தை அடைந்த பிறகு, ஒரு வாகனத்தில் வரும் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே மாணவரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதே நேரத்தில் வாகனம் இல்லாத மாணவர்களை அதிகாரிகள் நேரடியாக தங்கள் வீடுகளுக்கு அனுப்புவர்.
பயணத்தின் போது மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
இதற்கிடையில், சரவாக் மற்றும் சபாவுக்கு மாணவர்களை திருப்பி அனுப்புவது மே 1 முதல் தொடங்கும் என்றார்.
இந்த பயண நடவடிக்கையில் 85 சதவீதம் அல்லது 53,000 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்மாயில் சப்ரி முன்பு கூறியிருந்தார். மீதமுள்ள 15 சதவீத மாணவர்கள் தங்கள் உயர்கல்வி வளாகங்களிலேயே இருக்க விரும்புவதால், அவர்களுக்கு உணவு வசதிகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றார்.
நேற்று, கல்வி அமைச்சர் நோராய்னி அகமது ஒரு அறிக்கையில், பச்சை மண்டலத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே பச்சை மண்டலத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.