கோவிட்-19 குறித்த ஆலோசனையை மட்டுமே சுகாதார அமைச்சு வழங்கும் – நூர் ஹிஷாம்

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பு நிலைமை குறித்து மட்டுமே சுகாதார அமைச்சு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறது என்று அதன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மற்ற விஷயங்கள் அமைச்சின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

நாடாளுமன்ற அமர்வு குறித்து, சுகாதார அமைச்சு, அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறதா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நூர் ஹிஷாம் இதனைக் கூறினார்.

“நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, கோவிட்-19 தொடர்பான உண்மைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாங்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை பற்றி நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவிக்கிறோம்.

“எனவே கோவிட்-19 தொற்று பரவுவது குறித்து நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். மற்ற விசயங்கள், அமைச்சின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஏப்ரல் 25ம் தேதி பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹாசன், ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வுக்கான முடிவு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்றார்.

அதைத் தொடர்ந்து, இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற டி.ஏ.பி. உறுப்பினர் லிம் கிட் சியாங், தக்கியுதீனின் அறிக்கை சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்ததா இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.