மே 18 நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனைக்கு உட்பட வேண்டும். இது மே 14 அல்லது 15 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படும். சோதனை, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தனி மருத்துவமனை அல்லது மருத்துவ மையத்தில் சோதனைக்கு செல்ல விரும்பினால், பிரதிநிதிகள் தங்கள் மருத்துவரிடமிருந்து உறுதி கடிதத்தைப் பெற வேண்டும்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ மையத்தில் சோதனைக்கு செல்ல விரும்பினால், அதற்கான செலவை மலேசிய நாடாளுமன்றம் ஏற்காது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை மேற்கொள்ளத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் சபாநாயகர் முகமட் அரிப் யூசோப்பை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மே 18க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து திரும்பும்போது, சபா மற்றும் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட, சபாநாயகர் அலுவலகம் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு தங்களது சொந்த சுகாதாரத் துறைகள் உள்ளன என்றும், தனிமைப்படுத்துதல் குறித்து, அவற்றின் தனி விதிமுறைகளும் உள்ளன என்று கூறியுள்ளனர்.