வங்கிகள் வட்டியை தள்ளுபடி செய்ய நிதி அமைச்சர் பரிந்துரை

கடனை திருப்பிச் செலுத்துவதில் ஆறு மாத தாமதகாலப்பகுதியில் (மொராட்டோரியம் திட்டம்) விதிக்கப்படும் வட்டியை (வாடகை கொள்முதல் கடன்களுக்கு) அல்லது இலாபத்தை (நிலையான இஸ்லாமிய நிதிக் கடன்களுக்கு) தள்ளுபடி செய்ய வங்கிகள் பரிசீலிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கேட்டுக்கொண்டார்.

“இதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும், மற்றும் மக்களின் கோரிக்கையை கேட்டபின்னும், அனைத்து நிதி நிறுவனங்களையும், குறிப்பாக மொராட்டோரியம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், விதிக்கப்படும் வட்டியை (வாடகை கொள்முதல் கடன்களுக்காக) அல்லது இலாபத்தை (நிலையான இஸ்லாமிய நிதிக் கடன்களுக்கு) இந்த ஆறு மாத தாமதகாலப்பகுதியில் தள்ளுபடி செய்யுமாறு பரிந்துரைக்க விரும்புகிறேன்” என்று அவர் இன்று காலை ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“மக்களின் தேவைகளின் அடிப்படையில், சரியான முடிவுகளை எடுக்க நிதி அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா மற்றும் வங்கிகளுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்றார்.

ஏப்ரல் 30ம் தேதி, பேங்க் நெகாரா மலேசியா, ஆறு மாத தாமதகாலப்பகுதியில் (மொராட்டோரியம் திட்டம்), வாடகை கொள்முதல் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியும் அல்லது நிலையான இஸ்லாமிய நிதிக் கடன்களுக்கு விதிக்கப்படும் இலாபமும் தொடர்ந்து விதிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்த இரண்டு வகையான கடன்/நிதியுதவி பெறுபவர்கள், இப்போது ஆறு மாத கால தடைக்காலத்தில் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் வேறுவிதமாக நம்பிய கடன் வாங்கியவர்களிடையே இது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிக சமீபத்திய கேள்வி-பதிலின் படி, வங்கி கடன் வாங்கியவர்கள் தங்களது வங்கி அதிகாரிகளுடன் தற்காலிக தடைக்கு பின்னர் பணம் செலுத்தும் விதம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று பேங்க் நெகாரா தெளிவுபடுத்தியுள்ளது.