MCO-வின் தளர்வு, அரசாங்கத்தின் அவசர முடிவு இல்லை – இஸ்மாயில்

திங்களன்று அரசாங்கத்தின் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கும் முடிவு, ஒரு சிறிய தளர்வு மட்டுமே என்றார் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்,

கோவிட்-19 நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க இன்னும் பல துறைகள் செயல்படுவதைத் தடைசெய்துள்ளதாக அவர் கூறினார்.

“முழுமையாகத் திறக்கப்படவில்லை. அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் இல்லை. எடுத்துக்காட்டாக, கல்வி அமைச்சு இன்னும் செயல்படவில்லை. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் இன்னும் திறக்க அனுமதி இல்லை. வெகுஜனக் கூட்டம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. கூடல் இடைவெளி இன்னும் தேவைப்படுகிறது” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடந்த கோவிட்-19 தினசரி கூட்டத்தில் கூறினார்.

பொருளாதாரத் துறைகளை அரசாங்கம் அவசரமாக திறக்கின்றது என்ற கூற்றை இஸ்மாயில் மறுத்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட துறைகளின் பட்டியல், சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றி அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றார்.