கோவிட்-19: மீண்டும் பாதிப்புகளில் அதிகரிப்பு

மலேசியாவில் 105 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 16 நாட்களில் பதிவான மிக அதிகமான தினசரி அதிகரிப்பு ஆகும்.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், 11 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 94 உள்ளூர் தொற்று பாதிப்புகளைக் கொண்டது என்றார்.

இது பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 6,176 ஆக கொண்டுவந்துள்ளது.

116 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், இது, மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 4,326 பாதிப்புகள் அல்லது 70 சதவிகிதம் கொண்டுவந்துள்ளது என்று நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இன்று பிற்பகல் நிலவரப்படி செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் 1,747 ஆகும்.

இதில், 31 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இன்று மதியம் வரை புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இன்றுவரை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 103 அல்லது 1.67 சதவீதமாக பதிவாகியுள்ளது.