ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து நகரத்திற்கு திரும்புவதற்காக 500,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை காவல்துறை பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இன்னும் தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் தொழிலாளர்கள் வீடு திரும்புவது, கெராக் மலேசியாவின் அங்கீகாரத்தைப் பொறுத்துள்ளது, என்றார்.
“7 மே 2020 முதல் 10 மே 2020 வரை நடைபெறவிருக்கும் இந்த பயணத்திற்கான பயண அட்டவணையை காவல்துறை ஏற்பாடுசெய்யும். இதுவரை காவல்துறை 500,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.”
“காவல்துறையின் ஒப்புதல் கிடைக்கப்பெறாத தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அரசாங்கம் முதலாளிகளைக் கேட்டுள்ளது” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடந்த கோவிட்-19 தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
வரும் திங்களன்று குறிப்பாக அரசு ஊழியர்கள் விரைந்து வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் இஸ்மாயில் வலியுறுத்தினார். அலுவலகத்திற்குத் திரும்புவதற்கு முன்பு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டியிருப்பதால், காவல்துறையினரிடமிருந்து முதலில் ஒரு பயண தேதியைப் அவர்கள் பெற வேண்டும்.
உதாரணமாக, பயண அட்டவணை ஒரு வெள்ளிக்கிழமை வந்தால், அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வரை காத்திருந்து, அடுத்த வாரம் திங்களன்று மட்டுமே பணியைத் தொடங்கலாம் என்று இஸ்மாயில் மேலும் விரிவாகக் கூறினார்.