பி.கே.பி.பி: கெடா, சிலாங்கூர் உடனடியாக நடமாட்டத் தளர்வுகளை அனுமதிக்காது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்துவதை கெடா மாநிலம் ஒத்திவைக்கும் என்று கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மே 4-ல் அனைத்து தொழில்களையும் மீண்டும் தொடங்க சிலாங்கூர் அனுமதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு அறிவித்த பி.கே.பி.பி-யின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாநில அரசு ஆராயும் என்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார்.

“எனவே, இது குறித்து மே 5ம் தேதி நடைபெறும் மாநில பாதுகாப்பு செயற்குழு (கோவிட்-19) கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, பி.கே.பி.பி-யின் கீழ் செயல்படுவதை கெடா ஒத்திவைக்கும்.”

“மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படாமலும், கெடா ஒரு பச்சை மண்டலமாகவே இருப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் முகிதீன் யாசின் மே 4 முதல் பி.கே.பி.பி-யை அமல்படுத்துவதாக அறிவித்தார். இது, பெரும்பாலான வணிகங்களை மீண்டும் செயல்பட அனுமதித்துள்ளது.

இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அமலாக்கம் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து, முதலில் உள்ளூர் ஊராட்சி மன்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷரி கூறினார்.

“மாநில அரசு மட்டத்தில், அவசர முடிவை எடுக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒவ்வொரு கட்டமாக பார்க்க முயற்சிப்போம். உள்ளூர் ஊராட்சி மன்றங்களின் தயார்நிலையை கேட்டு அறிவோம்” என்று கூறியுள்ளார்.

உணவகங்கள் மற்றும் பொது பூங்காக்கள் போன்ற இடங்களில் இயக்க முறைகள் குறித்து ஊராட்சி மன்ற அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றார்.

“காவல்துறையினர் உணவகத்தைத் கண்காணிக்க முடியாது. அதற்கு முறையான அதிகாரிகள் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நான் ஷா ஆலம் பூங்காவைத் திறக்க அனுமதித்தால், அங்கு எத்தனை ஆயிரம் பேர் வருவார்கள் என்று தெரியாது. எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் போய்விடும். இவை அனைத்தும் விரிவாக சிந்திக்கப்பட வேண்டும். அதை ஒரே நாளில் செயல்படுத்திவிட முடியாது,” என்று அவர் கூறினார்.

அதோடு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்களையும் அவர் கவனிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, திங்களன்று பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான மத்திய அரசின் முடிவை பின்பற்றாது என்றும் நடமாட்டத் தளர்வுகளை அனுமதிக்காது என்றும் சரவாக் அரசும் முடிவு செய்தது.