பெரிக்காத்தான் கூட்டணி நிலையற்று இருந்தாலும் முகிதீன் யாசின் தொடர்ந்து பிரதமராக இருக்க முடியும் என்று அம்னோவின் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். முகிதீன் அம்னோவில் சேர்ந்தால் அது சாத்தியமாகும் என்கிறார் தாஜுதீன்.
இதனால் வரும் பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்றை எதிர்த்து போட்டியிட தேவையில்லை என்று தாஜுதீன் கூறினார்.
“வெவ்வேறு கட்சிகளில் இருக்கும்போது, நாம் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டியிருக்கும்… ஒற்றுமையாக இருக்க முடியாது.”
“அம்னோ நீண்ட காலமாக உள்ள ஒரு கட்சி, முகிதீனும் ஒரு மலாய்க்காரர். இனி பெர்சத்து எதற்கு? அம்னோவிற்கு வாருங்கள். அம்னோ பிரதமர் ஆகலாம்.”
“நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்…அம்னோவில் சேருங்கள். நல்லவர்கள் எல்லோரும் அம்னோவில் வந்து சேருங்கள். மலாய்க்காரர்களை அம்னோ ஏற்றுக்கொள்ளும்,” என அவர் மலேசியாகினியிடம் ஒரு நேர்காணலில் கூறினார்.
அம்னோவும் பெர்சத்துவும் இப்போது பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்து செயல்படுவதால், 15வது பொதுத் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்த பிரச்சினை பற்றி கேட்டபோது தாஜுதீன் இதனைக் கூறினார்.
அதே நேரத்தில், சில மூத்த அம்னோ தலைவர்கள், பாஸ் கட்சியுடன் முறையாக உருவாக்கப்பட்ட முவாபாக்கட் நேஷனலுடன் மட்டுமே ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, டி.ஏ.பியை வீழ்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகவே பெரிகாத்தானுடன் ஒத்துழைத்தாக தாஜுதீன் விளக்கினார்.
எதிர்காலத்தில் உறுதியான ஒத்துழைப்பு இல்லாவிட்டால், 15வது பொதுத் தேர்தலில் அம்னோவும் பெர்சத்துவும் முன்பு போலவே மோதும் என்று அவர் கூறினார்.
பெர்சத்து என்பது டாக்டர் மகாதீர் முகமதுவுடன் முகிதீன் நிறுவிய அம்னோவின் ஒரு பகுதியாகும். நஜிப் ரசாக் தலைமையின் போது அம்னோவின் துணைத் தலைவராக முகிதீன் இருந்துள்ளார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பாரிசாந்அம்னோ வேட்பாளர்களுக்கு எதிராக பெர்சத்து தனது வேட்பாளர்களை நிறுத்தியது.
பக்காத்தான் ஹரப்பானின் கூட்டணியாக ஒன்றிணைந்து பாரிசான் அரசாங்கத்தை வீழ்த்தி மத்திய மற்றும் கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசாங்கத்தையும் கைப்பற்றி வெற்றி பெற்றது பெர்சத்து.
இருப்பினும், அரசியல் நெருக்கடியால் முகிதீன் தலைமையிலான பெர்சத்து, பிப்ரவரி 24 அன்று பாக்காத்தானை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஆனால், மகாதீரின் குழு இந்த நடவடிக்கையை நிராகரித்தது.
பெர்சத்து பின், அம்னோ, பாஸ், ஜிபிஎஸ், எம்சிஏ மற்றும் எம்ஐசி ஆகியவையுடன் இணைந்து பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.
அரசாங்கத்திற்குள் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று வீழ்த்த முயன்றால் அரசாங்கம் நிலையானதாக இருக்காது என்றார் தாஜுதீன்.
“பெரிக்காத்தானில் உள்ள கட்சிகள் நியாயமானதாக இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்றை வீழ்த்த முயற்சிக்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.
அம்னோ, நிர்வாகத்தில் அனுபவம் பெற்றது. அதனால் சிறந்த அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும். இது குறித்து பிரதமர் கருத்தில் கொண்டு தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார் தாஜுதீன்.