லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 2,180 அஞ்சல் வாக்காளர்களில் பிரச்னைக்குரிய 90க்கும் மேற்பட்ட பெயர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்தத் தகவலை அந்தத் தொகுதிக்கான பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் வெளியிட்டார்.
“தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் இல்லாத 97 வாக்காளர்களின் பெயர்களை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். சில பெயர்கள் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன. 2011ம் ஆண்டு ஜுன் மாதம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் போலிப் பதிவுகளும் உள்ளன,” என்றார் அவர்.
அவர் இன்று லெம்பா பந்தாய் பிகேஆர் சேவை மையத்தில் நிருபர்களிடம் பேசினார். “சர்ச்சைக்குரிய விஷயங்களில் வாக்காளர் பட்டியலில் “பாலாய் போலிஸ் கெரிஞ்சி” (கெரிஞ்சி போலீஸ் நிலையம்) என்னும் பெயரைக் கொண்ட ஒரு வாக்காளர் காணப்படுவதும் ஒன்றாகும்.”
வாக்காளரின் போலீஸ் அடையாளக் கார்டு எண்ணைப் பயன்படுத்தி விவரங்களைச் சோதித்த போது ஒரு பெயர் இருப்பது தெரிய வந்தது. ஆனால் தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியலில் வேறு விதமாக உள்ளது,” என நுருல் இஸ்ஸா சொன்னார்.
அந்த வாக்காளரது அடையாளக் கார்டு எண் RF161872 ஆகும். அது தேர்தல் ஆணைய புள்ளி விவரக் களஞ்சியத்தில் உள்ள முகமட் பைசுல் முகமட் யூசோப் என்பவருக்கு அந்த எண் கொடுக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.
“அது பாலாய் பின் போலீஸ் கெரிஞ்சியா அல்லது பாலாய் போலீஸ் கெரிஞ்சியா,” என நுருல் இஸ்ஸா புன்முறுவலுடன் வினவினார்.
தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் காணப்படாமல் வாக்காளர் பட்டியலில் இருக்கும் வாக்காளர்கள் சம்பந்தப்பட்டது மற்ற பிரச்னைகளில் அடங்கும்.
“இரண்டு வாக்களிப்பு மாவட்டங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வாக்காளர்கள் விவகாரம் உண்மையில் தலையைச் சுற்றுகிறது. எடுத்துக் காட்டுக்கு சரிப்பா அரிப் (RF90153) என்பவர் பந்தாய் போலீஸ் நிலையத்திலும் பாகாங்கில் உள்ள பெக்கான் போலீஸ் நிலையத்திலும் அஞ்சல் வாக்காளராக இருக்கிறார்,” என அவர் வியப்புடன் கூறினார்.
2008ம் ஆண்டு அந்த நகர்ப் புறத் தொகுதியில் 56,000 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் இவ்வாண்டு ஜுன் மாதம் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,000 ஆகும்.
“நாம் அந்த பதிவு முறையை நம்ப முடியாது. வெகு விரைவில் வாக்களிப்பு நடைபெற்றால் என்ன நடக்கும்? இது மூன்றாம் காலாண்டுக்கான அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பட்டியல் ஆகும். நாளை தேர்தல் நிகழ்ந்தால் இந்தப் பட்டியல்தான் பயன்படுத்தப்படும்,” என அவர் விரக்தியுடன் கூறினார்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி வெறும் 149 ஆக இருந்த அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2ம் தேதி 2,180ஆக கூடியுள்ளது. இரண்டு மாதங்களில் மட்டும் 1,363 விழுக்காடு உயர்ந்துள்ளதாக நுருல் இஸ்ஸா குறிப்பிட்டார்.
“தூய்மையான, நேர்மையான முறை அல்ல”
இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள போலிப் பதிவுகள் கடந்த அக்டோபர் மத்தியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட சந்தேகத்துக்குரிய 42,000 பெயர்களில் இல்லை என்றும் அவர் சொன்னார்.
“நாங்கள் பிரச்னைகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால் அது எங்கள் வேலை அல்ல. வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெயரையும் நாங்கள் சோதிக்க வேண்டும் என்ரால் தேர்தல் ஆணையம் தேவையே இல்லை.”
“அந்த முறை தூய்மையானது அல்ல. நியாயமானது அல்ல. முறைகேடுகள் மலிந்துள்ளன”, எனக் கூறிய நுருல் இஸ்ஸா, அழியா மையைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான விதிகளை சீர்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துனார்.
வாக்காளர் புள்ளிவிவரக் களஞ்சியத்தில் குளறுபடிகள் இருப்பதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள சில பெயர்கள் சந்தேகத்துக்குரிய பதிவுப் பத்திரங்களைக் கொண்டுள்ளதாகவும் அது கூறுகிறது.