பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்த மறுத்ததற்காக பல மாநில அரசுகளை அச்சுறுத்தியுள்ள அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலியின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம். அஸ்மின் அலி ஆணவம் கொண்டவர் என்றும், அஸ்மினின் செயல்களும் தனக்கு புரியவில்லை என்றும் அன்வார் கூறியுள்ளார்.
“பேச்சுவார்த்தைகளில் என்ன தவறு? மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, அவர்கள் தளர்வுகளை அமல்படுத்துவதில் தாமதம் கேட்டால், அனுமதி வழங்க வேண்டும். வேலையின்மை, வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கவலைப்படாத மந்திரி புசார்கள், மாநில அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் இக்காலகட்டத்தில் (மந்திரி புசார்கள்/மாநில அமைச்சர்கள்) சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து சிந்திக்கிறார்கள்.”
“ஆதனால், அவர்கள் தளர்வுகளை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியிருக்கின்றனர். எட்டு மாநிலங்கள் அரசாங்கத்தின் முடிவை ஏற்கவில்லை என்றவுடன், அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், மாநில அரசாங்கத்தின் மீது வணிகங்களை வழக்கு தொடுக்கவும் அழைக்கிறார்.”
“இது…எனக்கு புரியவில்லை, இது ஆணவத்தையும், திமிரையும் குறிக்கிறது. அவரே சிறந்தவர் என்று நினைத்து, தான் செய்வதே சரி என்று நினைத்து, மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க மறுக்கிறார்.”
“ஆனால் எல்லோருக்கும் சொந்த அதிகார வரம்பு உள்ளது. இது நாட்டு பிரச்சனை; கோவிட்-19 பிரச்சினை; வேலையில்லா பிரச்சினை; பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டியுள்ளது. அதனால் எல்லா தரப்பையும் அழைத்துப் பேச வேண்டும். அவர்களுக்கு ஒன்றும் புரியாது என்று எண்ண வேண்டாம். அவர்களுக்கும் தெரியும்.” என்று பி.கே.ஆர் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பி.கே.பி.பி-யின் கீழ் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படாவிட்டால், வணிகங்கள் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு எதிர்கொள்ளக்கூடும் என்ற அஸ்மினின் அறிக்கை குறித்து அன்வார் கருத்து தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீண்டும் திறக்க மத்திய அரசின் முடிவு சட்டபூர்வமானது என்று நேற்று பொருளாதாரத்தின் மூத்த அமைச்சர் அஸ்மின் கூறினார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுடன் இணங்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அஸ்மின். அப்படி ஒத்துழைக்கவில்லை என்றால், மாநில அரசுகள் பல்வேறு கட்சிகளிடமிருந்து, குறிப்பாக தொழில்துறையினரிடமிருந்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஆறு மாநிலங்கள் மே 4 அன்று, அதன் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்காது என்றும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடரும் என்றும் தெரிவித்தன.
அவை சரவாக், சபா, பினாங்கு, பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் ஆகும்.
மாநில அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடருமாறு நிறுவனத்திடம் கேட்பதை விடுத்து, பி.கே.பி.பி.-யை நிராகரித்த மாநிலங்களுடன் அஸ்மின் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றார் அன்வார்.
“இதில் தாய்லாந்து மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. படிப்படியான நிலைகளில் தளர்வுகளை அமல்படுத்துவதை வலியுறுத்துகிறது. நாமும் அதை பின்பற்றலாம்”
அஸ்மினின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை நினைவூட்டுவதாக உள்ளது என்று அன்வார் மேலும் கூறினார்.
“எனவே, இது டிரம்ப் அதிபர் எப்படி இருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது. டிரம்பிடமிருந்து கற்றுக்கொண்டது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் டிரம்ப், அவரைப் பின்பற்ற விரும்பாத எவரையும் அச்சுறுத்துவார். நடவடிக்கை எடுப்பார். ஆகவே, டொனால்ட் டிரம்பை பின்பற்ற வேண்டாம்.”
“ஒரு நல்ல தீர்வைக் காண கவனமாக கலந்து பேசுங்கள்” என்று அவர் கூறினார்.