அஸ்மின்: அச்சுறுத்தல் அல்ல, ஒத்துழைப்பின் நினைவூட்டல் மட்டுமே

தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தனது முந்தைய அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார். பொருளாதாரத்தை மீண்டும் திறக்க மறுத்தால், மாநில அரசுகள் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து, குறிப்பாக தொழில்துறையினரிடமிருந்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்று அவர் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

நாட்டை மீட்டெடுக்க மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை நினைவூட்டுவதாகவே அவரின் அறிக்கை வெளியிடப்பட்டது என்று அஸ்மின் கூறினார்.

“அது ஒரு அச்சுறுத்தல் அல்ல, ஆனால் மக்களின் நல்வாழ்விற்கும், நாட்டின் ஆரோக்கியத்திற்கும் மத்திய மற்றும் மாநில அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்பதை நினைவூட்டுகிறது. இவை இரண்டும் மிக முக்கியமானவை என்பதை யாரும் மறுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மே 4 முதல், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுடன் (பி.கே.பி.பி) இணங்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னதாக அஸ்மின் கூறியிருந்தார். அப்படி ஒத்துழைக்கவில்லை என்றால், வணிகங்கள் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு எதிர்கொள்ளக்கூடும் என்ற அஸ்மின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முன்னதாக, பினாங்கு, சிலாங்கூர், கெடா, பகாங், கிளந்தான், நெகேரி செம்பிலன், சபா மற்றும் சரவாக் ஆகியவை அதன் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்காது என்றும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடரும் என்றும் தெரிவித்தன.

எவ்வாறாயினும், மத்திய அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப உடனடியாக பி.கே.பி.பி.-யை செயல்படுத்த கெடாவும் கிளந்தானும் இன்று ஒப்புக்கொண்டன.

சிலாங்கூர், பி.கே.பி.பி.-யை மாற்றியமைத்து, மத்திய அரசு நிர்ணயித்த விதிமுறைகளிலிருந்து வேறுபட்ட சில குறிப்பிட்ட கூடுதல் விதிமுறைகளுடன் (வாடிக்கையாளர்களை உணவகங்களில் சாப்பிட அனுமதிக்காதது உட்பட) செயல்படுகிறது.

பினாங்கு மாநில அமைச்சர் சோவ் கோன் யோவ், புத்ராஜெயா, 13 மாநில அரசுகளை தயார் நிலை படுத்த போதுமான நேரத்தை வழங்கவில்லை என்று குற்றம் கூறினார்.

மே 12 வரை பி.கே.பி.-யை மாநிலம் தொடர்ந்து செயல்படுத்தும் என்று சபா முதல்வர் ஷாபி அப்தால் இன்று தெரிவித்தார். சரவாக்கும் அப்படித்தான்.

அஸ்மின் இன்று, புத்ராஜெயாவுக்கும் மாநில அரசிற்கும் இடையே தொடர்ந்து உறவு கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பினாங்கு மாநில அமைச்சர் இன்று, மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தவறிவிட்ட அஸ்மின் சோம்பேறியாக இருப்பதாக விமர்சித்தார்.

“மூத்த அமைச்சர் என்ன எதிர்பார்க்கிறார் என்று நான் கேட்க விரும்புகிறேன் – ஒரு பொறுப்பான அமைச்சராக, பி.கே.பி.பி.-யை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் அனைத்து மாநில அரசாங்கங்களையும் ஈடுபடுத்துவதில் அவர் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்,” என்று சோ கூறினார்.