கோவிட்-19 பாதிப்பு தொடர்பானவர்கள் என நம்பப்படும் ஏழு நபர்கள் திங்கள்கிழமை கோலாலம்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த அந்நபர்கள் சிலாங்கூர் மேன்ஷன், மெனாரா சிட்டி ஒன் மற்றும் கம்போங் பாருவைச் சுற்றி குடியிருந்ததாக தி ஸ்டார் வட்டாரம் தெரிவித்தது.
திங்கள்கிழமை அதிகாலை 10:00 மணியளவில் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
தகவல்களின்படி, அவர்கள் மே 7 வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த மாதம், காம்போங் பாருவில் உள்ள பி.கே.என்.எஸ் அடுக்குமாடி குடியிருப்பில் கோவிட்-19 பாதிப்பினால், சுகாதார அதிகாரிகள் அங்கு சுகாதார பரிசோதனையை மேற்கொண்டனர். பின்னர் 23 பேர் நேர்மறையாக சோதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கோவிட்-19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து, மெனாரா சிட்டி ஒன், சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றியுள்ள பகுதிகள் பல வாரங்களுக்கு கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ் வைக்கப்பட்டன.
இருப்பினும், மே 3 ஆம் தேதி இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான அந்நியத் தொழிலாளர்கள் உள்ளனர்.
பி.கே.பி.டி முடிவடைவதற்கு முன்னர், இப்பகுதியில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அரசாங்கம் தடுத்து வைத்தது.
இந்த நடவடிக்கை அவர்களை தலைமறைவாக சென்றுவிட வழிவகுக்கக்கூடும் என்றும், கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு பாதகமாக அமையும் என்றும் மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த சோதனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 586 சட்டவிரோத குடியேறிகளும் சுகாதார சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்றும், மேலும் அவர்கள் கோவிட்-19 நோய்க்கு எதிர்மறையாகவே கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் தடுப்பு நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான சோதனைகளுக்கு அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.