ஜாஹிட் மகள் வழக்கில் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி

பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மலேசியாவின் தேசிய ஊடக சங்கம் (NUJ) நாட்டின் நீதித்துறையிடம் விளக்கம் கோரியுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி) மீறியதற்காக நேற்று நூருல்ஹிடாயா அகமட் ஜாஹிட் மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் ஆகியோருக்கு எதிரான வழக்கு நேற்று நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக நிருபர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் திறந்த நீதிமன்றத்தில் செய்தி சேகரிப்பது தடைசெய்யப்பட்டது.

இது குறித்து, NUJ பொதுச் செயலாளர் சின் சுங் செவ், இந்தத் தடை, நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்பதைக் குறிக்கிறது என்று கூறினார்.

“அத்தகைய தடைக்கு NUJ ஆட்சேபனை தெரிவிக்கிறது. இது பத்திரிகை சுதந்திரத்திற்கான உரிமையை மலேசியா நடைமுறைபடுத்தவில்லை என்பதைக் குறிக்கிறது. இது போன்ற தடை நாட்டின் நீதி முறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிமன்றங்களால் செய்யப்படுவது வருத்தமளிக்கிறது.”

“மலேசியா ஒரு ஜனநாயக நாடு. நீதிமன்றங்கள் தங்கள் மக்கள் மீது நீதிப் பணிகளை எவ்வாறு மேற்கொள்கின்றன என்பதை செய்தியாக அளிப்பது ஊடகங்களின் பொறுப்பாக உள்ளது.”

“இது தொடர்பாக, தடை குறித்து NUJ நீதிமன்றத்திடம் விளக்கம் கோருகிறது. தடை ஏன் விதிக்கப்பட்டது என்று எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் நடவடிக்கை பத்திரிக்கையாளர்கள் தகவல்களை அணுகுவதைத் தடுக்கும் ஒரு வழியாகும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையையே செய்கின்றனர் என்றும் சின் கூறினார்.

பத்திரிக்கையாளர்கள் நீதிமன்ற விதிகளையும் மீறவில்லை. ஆகவே இந்தத் தடை, செய்திகளைப் பெறுவதற்கான பத்திரிக்கையாளர்கள் கடமையின் அடக்குமுறையாக கருதப்படலாம் என்றார்.

“அனைத்து தரப்பினரும் அதிக கவனத்துடன், தொழில் ரீதியாக பத்திரிக்கையாளர்களின் பங்கைப் புரிந்து கொள்வார்கள் என NUJ நம்புகிறது,” என்று அவர் கூறினார்.