கோவிட்-19 பாதிப்பில் இருந்து மேலும் 135 நோயாளிகள் மீண்டு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது, இன்றுவரை மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 4,702 பேருக்கு கொண்டு வந்துள்ளது. இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 73.15 சதவீதமாகும்.
இன்று நண்பகல் வரை மொத்தம் 45 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மலேசியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,428 ஆகும்.
“1,619 பாதிப்புகள் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ளன. அவை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
45 புதிய பாதிப்புகளில் 44 பாதிப்புகள் உள்ளூர் தொற்றுகளைச் சேர்ந்தவை என்று அவர் கூறினார்.
“கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை பகுதியில் அமைந்துள்ள தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ் உள்ள குழுமம் மற்றும் வட்டாரங்களிலிருந்து ஒரு (புதிய) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) 22 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவர்களில், ஒன்பது நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
இதற்கிடையில், மற்றொரு கோவிட் நோயாளி இறந்துள்ளார். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 1.66 சதவீதமாக உள்ளது.
107-வது இறப்பு (‘நோயாளி 2,380’)
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் பின்னணி கொண்ட 51 வயதான மலேசிய நபர். ஏப்ரல் 22 ஆம் தேதி சுங்கை புலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மதியம் 2.53 மணியளவில் இறந்துவிட்டார்.