அம்னோ கட்சி முறையாக தேசிய கூட்டணியில் (பி.என்) சேர வேண்டும் என்ற திட்டத்தை, அம்னோ உச்ச சபை (Majlis Tertinggi (MT) Umno) நிராகரித்துள்ளது என்று ஒரு ஆதாரம் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.
கட்சியின் நிலைப்பாடு மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், திங்களன்று நடைபெற்ற எம்டி (MT) கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“எம்டி ஒருமனதாக நிராகரித்துள்ளது. நாங்கள் சிறுபான்மை கட்சியாக இருக்க விரும்பவில்லை. பெரிக்காத்தானில் பல கட்சிகள் இருப்பதனால், அதில் அம்னோ இதற்கு முன்பு இருந்த பாரிசானை போல இருக்க முடியாது.”
“எம்டி கூட்டத்திற்கு முன்பாகவே, அரசியல் கூட்டத்தின் மூலம் கட்சியும் இந்த திட்டத்தை நிராகரித்தது. மாநில அம்னோ தலைவர்களின் கூட்டமும் அதை நிராகரித்தது” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
கடந்த மாதத்தின் பிற்பகுதியில், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், பெரிக்காத்தான் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கூட்டணி அல்ல என்றும், அம்னோ ஒருபோதும் அதில் சேரவில்லை என்றும் வலியுறுத்தினார்.
“பெரிகாத்தான் உடனான அம்னோவின் உறவு, மலேசியாவைக் காப்பாற்றுவதற்கான ஒரு புரிதலால் ஏற்பட்ட உறவு மட்டுமே. பாக்காத்தானுக்குள் சில குழுக்கள் உருவாக்கிய அரசியல் கொந்தளிப்பினால் இது உருவானது” என்று அவர் கூறினார். முறையாக நிர்வகிக்கப்படும் முவாபாக்காட் நேசனல் மற்றும் பாஸ் கட்சி உடனான ஒப்பந்தத்திலிருந்து பெரிகாத்தான் உடனான இந்த ஒத்துழைப்பின் வடிவம் வேறுபட்டது, என்பதை அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான், பெர்க்காத்தான் மற்றும் அம்னோவை கூட்டணியாக பதிவு செய்வதற்கான திட்டத்தை கவனமாக ஆராய்ந்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அதே நேரத்தில், பெரிக்காத்தான் அரசாங்கத்திற்கும், பிரதமராக முகிதீனுக்கும் அம்னோ ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.
“அம்னோவுக்கு என்ன நன்மை, என்ன தீமை என்பதை தீவிரமாக பார்க்க வேண்டும். இதனால் அம்னோ, பெரிக்காத்தானை ஆதரிக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆதரவு இல்லை என்றால் நாங்கள் அரசாங்கத்தில் இருக்க மாட்டோம்.”
பெரிக்காத்தான் மூலம், கடந்த பொதுத் தேர்தலில் மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களை அம்னோ மீண்டும் கைப்பற்ற முடிந்தது.
பேராக் நகரில், அம்னோ மாநில சட்டசபையில் அதிக இடங்களைப் பெற்ற போதிலும், பெர்சத்து பேராக் அரசாங்கத்தின் தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளது.