பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பெறப்படவில்லை

பிரதமர் முகிதீன் யாசின் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எந்தவொரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் இதுவரை நாடாளுமன்றம் பெறவில்லை என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) துணை அமைச்சர் எடின் சியாஸ்லி ஷித் தெரிவித்தார்.

“இதுவரை யாரும் இந்த தீர்மானத்தை சமர்ப்பிக்கவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நாடாளுமன்ற விதிகளின்படி, அமர்வின் 14 நாட்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அது பின்னர் அமர்வு நாளில், நாடாளுமன்ற கூட்ட நிரல் அட்டவணையில் சேர்க்கப்படும்.

14 நாள் காலக்கெடு பூர்த்தி செய்யப்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நலன்களின் விஷயங்களில் அவசர தீர்மானத்தை அமர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே தாக்கல் செய்யலாம்.

எதிர்க்கட்சி முறையே 2008 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், முறையே அப்துல்லா அகமட் படாவி மற்றும் நஜிப் ரசாக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஒரு அவசர தீர்மானத்தை முயற்சித்தனர். ஆனால் இரண்டையும் நாடாளுமன்றம் நிராகரித்தது.

முன்னதாக, பிப்ரவரி மாதம் பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று பாக்காத்தான் வலியுறுத்தியது.

இருப்பினும், மார்ச் 13 அன்று, பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் அக்கூட்டணி கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் என்றார்.