பயணிகள் நெரிசல், கே.டி.எம்.பி. மன்னிப்பு கோரியது

பயணிகளை ஏற்றிச் சென்ற இரயில், கூடல் இடைவெளி தேவைகளை கடைபிடிக்காமல், அதிக பயணிகளுடன் மிகவும் கூட்டமாக இருந்ததற்கு போக்குவரத்து அமைச்சும் கே.டி.எம் பெர்ஹாட்டும் (KTM Berhad) மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ஒரு கே.டி.எம். கம்யூட்டர் இரயிலில், பயணிகள் தோளோடு தோள் நிற்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலானது.

வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அமைச்சு, ஆறு பயணி பெட்டிகளுடைய ரயிலில் இயந்திர கோளாரு ஏற்பட்டதால், மூன்று பயணி பெட்டிகளைக் கொண்ட மாற்று ரயிலில் பயணிகளை கொண்டு செல்ல காரணமாக அமைந்ததது என்று விளக்கமளித்துள்ளது.

வீடியோ பதிவில் காணப்பட்ட மாற்று ரயிலின் நெரிசலான காட்சி, மே 5 அதிகாலை கிள்ளான்-தஞ்ஜோங் மாலிம் இடங்களுக்கான இரயில் பயண சேவையில் எடுக்கப்பட்டதாகும்.

“இருப்பினும் ரயிலின் இந்த தொழில்நுட்ப கோளாரு, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு விதிகளை மீறும் நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. இரயிலில் பயணி ஒருவர் பதிவு செய்த 10 விநாடி வீடியோவும் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் எப்போதும் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக கே.டி.எம்.பி (Keretapi Tanah Melayu Berhad (KTMB)) மற்றும் போக்குவரத்து அமைச்சு பொது போக்குவரத்து சேவைகளில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும்” என்று தெரிவித்துள்ளன.

இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாது என்று போக்குவரத்து அமைச்சு உறுதியளித்ததுடன், கடுமையான பயணிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தியது.

“இரயிலில் ஏற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நுழைவாயிலில் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும் இதில் அடங்கும்”.

“போக்குவரத்து அமைச்சு மற்றும் கே.டி.எம்.பி. பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறது. மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் நினைவூட்டுகிறது. குறைந்தது ஒரு (1) மீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் ரயில் சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு முகக்கவரி அணிவது போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியது.