பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகிறார் டாக்டர் மகாதீர் – ஆதாரம் கூறுகிறது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் முகிதீன் யாசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

“சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்துள்ளார்” என்று நம்பகமான ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

கருத்துக்காக மலேசியாகினி பாக்காத்தான் செயலகத்தை தொடர்பு கொண்டுள்ளது.

இது குறித்து விரிவாகக் கேட்டபோது, பாக்காதானின் மூத்த தலைவரான அவ்வட்டாரம், நாடாளுமன்றத்தில் தனக்கு அதிக பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பது முகிதீனின் பொறுப்பாகும் என்றார்.

அரசாங்கத்தின் மசோதாவை விவாதிக்க அமரவிருக்கும் நாடாளுமன்றம் மே 18 அன்று மட்டுமே நடைபெறும்.

இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தளர்த்தப்பட்டதால், அமர்வு இரண்டு வாரங்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட்-19 கிருமி பாதிப்பின் விளைவாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாக்காத்தான் அறிந்துள்ளதாகவும் அதில் மிகுந்த அக்கறையுடனும் இருப்பதை ஒப்புக் கொண்டாலும், முகிதீன் பெற்றிருக்கும் ஆதரவின் அளவை நிரூபிக்க இத்தீர்மானம் அவசியமாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

“இது, ஒரு அரசாங்கத்தின் நியாயத்தன்மையையும், கோவிட்-19 நெருக்கடியில் மக்களுக்கு உதவுவதற்கான கூட்டுப் பொறுப்பையும் சமநிலைப்படுத்துவதாகும்.”

“பிப்ரவரி மாதத்தில் மாட்சிமைத் தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் (அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா) முகிதீனுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்ற நம்பிக்கையில் அவரை பிரதமராக நியமித்தார். அதை தொடர்ந்து, முகிதீன் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றார் என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம்.”

“அந்த ஆதரவைச் சோதிக்கும் இடம் நாடாளுமன்றமே. இது ஒரு அரசாங்கத்தின் நியாயத்தன்மையைப் பற்றியது. அதனால், நாடாளுமன்றம் ஒரு முறையான இடமாகும்” என்று அவர் கூறினார்.