டாக்டர் மகாதீர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் ஷாஃபி அப்டால்

டாக்டர் மகாதீர் முகமது மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியுள்ளார் சபா முதல்வர் முகமட் ஷாஃபி அப்டால்.

ஒருவர் பிரதமர் ஆக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். டாக்டர் மகாதீருக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கும் நடவடிக்கை இது என ஷாஃபி அப்டால் தெரிவித்தார்.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிஃப் யூசோஃப் இதை உறுதிப்படுத்தினார்.

பிரதமரை நியமிக்கும் பேரரசரின் அதிகாரத்திற்கு முரணான எண்ணம் தனக்கு இல்லை என்று செம்போர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாஃபி அப்டால் தெரிவித்தார். ஆனால் இந்த நடவடிக்கை நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றார்.

மகாதீரும் பாக்காத்தானும் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்று கூறியுள்ள நிலையில், முகிதீனுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவு விவாதத்திற்குரியதாகவே உள்ளது.

மார்ச் 1 ம் தேதி எட்டாவது பிரதமராக பதவியேற்றதிலிருந்து நாடாளுமன்ற அமர்வு ஏதும் இல்லாததால் இதுவரை முகிதீனின் நிலைப்பாடு சோதிக்கப்படவில்லை.