லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமது மீது நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடங்குவதற்கான செம்போர்னாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஃபி அப்டாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் ஆரிப் யூசோப்.
“செம்போர்னாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஃபி அப்தால் சமர்ப்பித்த கோரிக்கை மற்றும் அவரது விளக்கத்தின் விவரங்களை நான் ஆராய்ந்து வருகிறேன்.”
“அதில் கூறப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில், இது மத்திய அரசியலமைப்பின் 43வது பிரிவுக்கு முரணாக உள்ளது என்று நான் காண்கிறேன், ஏனெனில் அது பிரதமரை நியமிக்கும் விஷயத்தில் பேரரசருக்குள்ளான அதிகாரத்தை மறுக்கும் படியாக அமைகிறது.”
“எனவே, அதை கொண்டு வர நான் அனுமதிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
தனது கோரிக்கையில், பிரதமரை நியமிக்கும் பேரரசரின் அதிகாரத்திற்கு முரணான எண்ணம் தனக்கு இல்லை என்று செம்போர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாஃபி அப்டால் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை அறியும் நோக்கத்தை கொண்டது என்றார்.
இதனிடையே, மகாதீர் ஒரு தனி கோரிக்கையை அனுப்பி பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதாக தெரிகிறது.
இது குறித்து ஆரிப்பிடம் கேட்டபோது, மகாதீரின் கோரிக்கை குறித்து தான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார்.
“நாளை காத்திருங்கள். அதற்கு ஊடக அறிக்கை மூலம் பதிலளிக்கப்படும்,” என்றார்.