பிப்ரவரி 23 அன்று பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர், பெர்சத்து மீண்டும் அக்கூட்டணியில் சேர விரும்பவில்லை என்று அதன் தலைமை தொடர்பு அதிகாரி டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு பெர்சத்து கட்சியின் சார்பாக பாக்காத்தான் மற்றும் வாரிசான் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.
“பெர்சத்து இதைப் பற்றி ஒருபோதும் விவாதிக்கவில்லை. பாக்காத்தானில் மீண்டும் சேர விருப்பமில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.”
பாக்காத்தானுடன் பெர்சத்துவை ஒன்றிணைக்கும் எந்தவொரு முயற்சியும் கட்சியின் அதிகாரபூர்வ முடிவுக்கு முரணானது என்று ராட்ஸி கூறினார்.
நான்கு நாட்களுக்கு முன்னர், பெர்சத்து உறுப்பினர்களை பாக்காத்தானுக்கு திரும்புமாறு கெடா மந்திரி புசார் முக்ரிஸ் அழைப்பு விடுத்தார். பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்தால் பெர்சத்து சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்தார்.
மே 5 அன்று, பெர்சத்து கட்சி மீண்டும் பாக்காத்தான் ஹராப்பானில் சேர விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இருப்பினும், பாக்காத்தான் தலைமையின் கீழ், சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்து மாற்றத்தின் திட்டங்களை பெர்சத்து பின்பற்ற வேண்டும் என்று அன்வார் நினைவுபடுத்தினார்.
முக்ரிஸ் அழைப்பு விடுத்தது குறித்து கேட்டபோது, அது முக்ரிஸின் தனிப்பட்ட கருத்து என்றார் ராட்ஸி.
இதற்கிடையில், கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எப்போதும் கட்டுப்பட வேண்டும் என்றும், கட்சி கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் கட்சியின் உறுப்பினர்களை ராட்ஸி நினைவுபடுத்தினார்.
கட்சியின் முடிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் கீழ்ப்படியாத எந்தவொரு உறுப்பினரும் உடனடியாக அதன் உறுப்பியத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.