நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.) மீறியதற்காக தனித்து வாழும் தாய் லீசா கிறிஸ்டினாவுக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்று நம்பியதற்காக முழு தண்டனையையும் எதிர்கொள்ள மனதளவில் அவர் தயாராக இருந்தார்.
இருப்பினும், காஜாங் சிறையில் மற்ற 37 கைதிகளுடன் உரையாடத் தொடங்கியபோது, ஏதோ தவறு இருப்பதாக லீசா உணர்ந்தார்.
“அந்த சிறையில் 38 பேர் இருந்தோம். அங்கு நான் மட்டுமே மலேசிய பிரஜை. மற்றவர்கள் எல்லோருமே இந்தோனேசியப் பெண்கள்.”
“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.) மீறியதற்காகவும், முறையான குடிநுழைவு ஆவாணங்கள் இல்லாததற்காகவும் அவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் சிறைத்தண்டனை என்னுடையதை விட குறைவாக இருந்தது (14 நாட்களுக்கு). அவர்களால் சிறையில் நான் கேலி செய்யப்பட்டேன்.”
“அந்த சிறையில் எனக்கு எதிரான தண்டனை தான் மிக அதிகமாக இருந்தது. அதனால்தான், அவர்கள், ஒரு மலேசிய பெண் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக ஏன் 30 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்படுகிறார் என்று கேள்வி கேட்டனர்.”
“அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நான் பொய் சொல்வதாக அவர்கள் கூறினார்கள்,” என்று லீசா இன்று பாத்து நாடாளுமன்ற சேவை மையத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
என்ன நடக்கிறது என்று தெரியாததால் அவர்களிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார் லீசா.
“ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன், ஆனால் அவர்கள் என்னை நம்பவில்லை. அது எனக்கு ஒரு மோசமான அனுபவம்” என்று அவர் கூறினார்.
சிறையில் இருந்த தனது அனுபவத்தை விரிவாக விவரிக்கும்படி கேட்டபோது, லீசா, அவ்வாறு செய்தால், அவர் மிகவும் கவலைகொண்டு அழக்கூடும் என்று கூறினார்.
ஏப்ரல் 29ம் தேதி சிறைத் தண்டனையை மறுஆய்வு செய்து மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதிப்பதற்கு முன்பு, லீசா எட்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அதே குற்றத்திற்காக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமீடியின் மகள் மற்றும் அவரது கணவருக்கும், RM800 அபராதம் விதிக்கப்பட்டதை அறிந்த லீசா மேலும் கோபமும் அதிருப்தியும் அடைந்தார்.
லீசா முன்னதாக ஒரு முகநூல் பதிவில் நூருல்ஹிடாயா அகமட் ஜாஹிட் மற்றும் சைபுல் நிஜாம் முகமட் யூசோப் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து அதிருப்தி பற்றி எழுதியிருந்தார்.
“அந்த நேரத்தில் நான் கோபமாக இருந்தேன், அதிருப்தி அடைந்தேன். ஒரு டத்தோவின் மகளுக்கு நான் செய்த அதே குற்றத்திற்காக RM800 அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.”
“அனைவருக்கும் சட்டம் நியாயமாக இருக்க வேண்டும்.”
“நான் உணர்ந்ததை (ஒரு முகநூல் பதிவில்) சொன்னேன். அது என் இதயத்திலிருந்து வந்தது. நான் ஒரு விஷயத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன், என் நீதிக்காக. தவறு என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.