முகிதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்

பிரதமர் முகிதீன் யாசின் மீதான லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதிர் முகமதுவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோப் இன்று ஏற்றுக்கொண்டார்.

சட்டமன்றத்தின் விதிகளின் 27வது பிரிவின் கீழ் இந்த தீர்மானத்தை பெற்றுள்ளதாக ஆரிஃப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இது, வரும் மே 18 அமர்வில் விவாதிக்கப்படுமா அல்லது அடுத்த நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

மே 18 அன்று நடைபெறவிருக்கும் கூட்டம் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபையின் பொதுச்செயலாளர் ஏப்ரல் 17ம் தேதி அறிவிப்பு அனுப்பியுள்ளார்.

வழக்கத்தில் இருந்து வேறுபட்டு, வரும் நாடாளுமன்ற அமர்வு ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.

மே 4 அன்று, முகிதீனுக்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று டாக்டர் மகாதீர் முகமட், ஆரிஃபுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.