பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மான முயற்சிகள் தோல்வியடையலாம்

மே 18 ஆம் நாடாளுமன்ற அமர்வில், பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் எதிர்க்கட்சியின் முயற்சிகளுக்கு சாத்தியமில்லாமல் போகலாம்.

நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்தின் போது அரசாங்க விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளர்.

மற்ற விஷயங்கள் ஜூலை 13 ஆம் தேதி நடக்கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படும் என்று தக்கியுதீன் கூறினார்.

தேசிய கூட்டணி (பிஎன்) ஆட்சி அமைத்த பின்னர் முதல் முறையாக நடத்தப்படும் இந்த ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டம், கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து சுருக்கப்பட்டுள்ளது என்று இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தக்கியுதீன் விவரித்தார்.

மற்ற திட்டங்கள் விவாதிக்கப்படுமா என்று கேட்டபோது, “பேரரசர் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்பிப்பார். பின்னர், அரசாங்கத்தின் விவகாரங்களைத் தீர்ப்பதற்கு சபை கூட்டப்படும். அரசாங்க விவகாரங்கள் முதன்மை படுத்தப்படும்,” என்று கூறினார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் இப்ராஹிமை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிப்பது முதலிட்ட நான்கு திட்டங்களை அரசாங்கம் முன்வைக்கும் என்று தக்கியுதீன் மேலும் கூறினார்.