கோவிட்-19: 68 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லாத மூன்றாம் நாள்

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோயினால் புதிய இறப்புகள் ஏதும் இல்லை என்றுள்ளார். இதுவரை மலேசியாவில் கோவிட்-19 நோயால் மொத்தம் 107 பேர் இறந்துள்ளனர்.

கோவிட்-19 நோயாளிகள் யாரும் இறக்காத மூன்றாவது நாள் இன்று ஆகும். கடைசியாக இறந்தவர் ‘நோயாளி 2,380’ – 51 வயதான உள்ளூர் நபர், சுங்கை புலோ மருத்துவமனையில் மே 5 மதியம் 2.53 மணிக்கு இறந்தவர் ஆவார்.

இன்று நண்பகல் நிலவரப்படி, 88 நோயாளிகள் மீட்கப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,864 ஆகவும், இது மொத்த பாதிப்புகளில் 74.43 சதவீதமாகவும் உள்ளது.

68 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்த பாதிப்புகள் 6,535 ஆக உள்ளன, அவற்றில் 1,564 பாதிப்புகள் செயலில் உள்ளன.

இதில் 64 பாதிப்புகள் உள்ளூர் தொற்றிலிருந்து வந்தவை, 57 பாதிப்புகள் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை ஆகும்.

“தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ் உள்ள குழுமம் மற்றும் வட்டாரங்களில் இருந்து மொத்தம் மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மொத்தம் 18 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், ஏழு நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.