சபாநாயகரை மாற்ற பெரும்பான்மை ஆதரவு இல்லையா?

பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஆரிஃப் யூசோப்பை நீக்க தேசிய கூட்டணி (பி.என்.) அரசாங்கம் ஏன் பரிந்துரை செய்யவில்லை என்று அரசியல் ஆர்வலர் அப்துல் மாலெக் ஹுசின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சபாநாயகர் டான் ஸ்ரீ முகமட் அரிஃப் முகமட் யூசோஃப் இன்னும் பதவியில் நீடிக்கிறார். ஏன் சவால் செய்யப்படவில்லை?”

“சபாநாயகரை மாற்ற விரும்பினால், நாடாளுமன்ற அமர்வுக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னரே வேறு ஒரு வேட்பாளரின் பெயரை பரிந்துரைக்க வேண்டும் அல்லவா? பி.என். அரசாங்கம் ஏன் யாரையும் பெயரிடவில்லை?”

“இது நாடாளுமன்றத்தில் பி.என்.-னுக்கு போதிய ஆதரவு இல்லை என்ற ஆரம்ப அறிகுறிகளாகவே தெரிகிறது” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

தெளிவான பெரும்பான்மை இருப்பதில் உறுதியாக இல்லாததால், முகமட் ஆரிஃபுக்கு பதிலாக பி.என். வேறு சாத்தியமான வேட்பாளர்களின் பெயர்களை முன்மொழியத் துணியவில்லை. அதற்கான நேரமும் ஏற்கனவே கடந்துவிட்டது என்றார்.

சபாநாயகர் ராஜினாமா செய்யாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்றும் அவர் கூறினார்.

“கடந்த பொதுத் தேர்தலின் போது பாக்காத்தான் அரசாங்கம் நியமித்த சபாநாயகரை ஏன் மாற்ற வில்லை?

தன் கருத்துபடி, பி.என். அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் நினைத்தாலும், அது நிச்சயமாக ஒரு சந்தேகமும் கவலையும் கலந்ததாகவே இருக்கும். குறிப்பாக மார்ச் மாதத்தில் அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தில் அவர்களின் பெரும்பான்மை இன்னும் சோதிக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார்.

“பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் நம்பினால், சபாநாயகரை பதவி நீக்கம் செய்யவும் அவருக்கு பதிலாக வேறு ஒருவரையும் முன்மொழிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.