Mara Corp ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியை நிராகரித்தார் மாஸ்லீ மாலிக்

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், மாரா கோர்ப் (Mara Corp) ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதை நிராகரித்தார்.

இன்று தன் முகநூலில் ஒரு பதிவில் மஸ்லீ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கோவிட்-19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில் தற்போதைய கவனம் இருக்க வேண்டும் என்றும், மேலும் தான் எடுக்கும் முடிவு, மக்களின், குறிப்பாக சிம்பாங் ரெங்காமில் உள்ள வாக்காளர்களின் ஆணைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று உணர்ந்ததால் அவரின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறினார்.

“நான் எடுக்கும் முடிவு, குறிப்பாக சிம்பாங் ரெங்கம் ஆதரவாளர்கள், மக்கள் மற்றும் பொதுவாகவே மலேசியர்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன்.”

“இந்த நேரத்தில், மக்களின் கஷ்டங்கள் மற்றும் கோவிட்-19 பேரழிவை எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்களால் நான் மிகவும் வருந்தம் அடைகிறேன். சிம்பாங் ரெங்காமிலேயே, பல குடும்பங்கள் வேதனையில் உள்ளனர், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது”.

“எனவே, இந்த நேரத்தில் இந்த நியமனத்தை என்னால் ஏற்க முடியாது. கோவிட்-19க்கு எதிரான போரில் நாம் இன்னும் வெல்லவில்லை. நம் நாடு முதலில் வெல்ல வேண்டும், பேரழிவிலிருந்து விடுபட வேண்டும், மக்களின் வாழ்க்கை மீண்டும் சீராக, நிலையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த மஸ்லீயின் நியமனத்தை புறநகர் மேம்பாட்டு அமைச்சர் அப்துல் லத்தீப் அகமது நேற்று அறிவித்தார்.

மஸ்லீயைத் தவிர, அப்துல் லத்தீப், பெர்சத்துவின் மற்ற தலைவர்களையும் நியமித்தார். குறிப்பாக மராவின் தலைவராக அஜிசா முகமட் டுன், மாரா கோர்ப் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ராபீக் நைசாமோஹிதீன் நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், பல தொழில் வல்லுநர்களையும், பூமிபுத்ரா தொழில்முனைவோர்களையும் பெற்றெடுத்த மாரா, கோவிட்-19 பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று மஸ்லீ கூறினார்.

“பி 40, நாள் ஊதியம் பெறுபவர்கள், வேலையில்லாத பூமிபுத்ரா மற்றும் கோவிட்-19 பாதிப்பால் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு உதவுவதில் அந்நிறுவனம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.