இது அங்கீகரிக்கப்படாத ஓர் அரசாங்கம், மகாதீர் மற்றும் அன்வார் கூறுகிறார்கள்

மக்களின் ஆணை இல்லாமல் உருவாக்கப்பட்ட இன்றைய தேசிய கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்கப்படாதது என்று பெர்சத்து கட்சியின் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தனர்.

மே 9, 2018 அன்று 14வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) வெற்றியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

“இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நாங்கள் இன்றைய அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை. அரசாங்கம் அமைக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே, அது மக்களின் ஆணை இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களின் தெளிவான புரிதல்.”

“அவர்களின் வெற்றி, தேர்தல் வாக்குச்சீட்டில் சட்டப்பூர்வமாக பெறப்படவில்லை, பேராசை மற்றும் பதவி ஆசையை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே ஆகும்”.

“உண்மையில், இன்றைய அரசாங்கத் தலைவர்கள் யாரும் மக்களுக்கு சேவை செய்வதாக ஒருபோதும் உறுதியளித்ததில்லை” என்று மகாதீர் மற்றும் அன்வார் கூறினர்.

அவ்வகையில், ஒழுக்கங்களையும் நெறிமுறைகளையும் சமரசம் செய்து இந்த அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று இந்த இரு தலைவர்களும் கூறியுள்ளனர்.

“வாக்களிப்பு நாட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்ற மக்களை, வாக்களிப்பதற்காக பல இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ரிங்கிட்டுகளை செலவு செய்து விமானத்தில் பறந்து வந்த வாக்காளர்களை, நாட்டின் தலைவிதியை மாற்ற வாக்களிப்பதற்காக ஊதியம் பெறாத விடுப்பு எடுத்து வந்த வாக்காளர்களையும் நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை, துரோகம் இழைக்க விரும்பவில்லை,” என்று அவர்கள் கூறினர்.