ஜி.எல்.சி நியமனங்கள் மிகவும் துரிதமாக நடைபெறுகின்றன

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகமட் நோர் உட்பட அரசு-இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, நியமனக் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று ரம்லி கூறினார்.

மலேசியாகினி கண்ட அந்நியமனக் கடிதத்தின்படி, ரம்லி, அமனா ராயா பெர்ஹாட் (Amanah Raya Berhad) நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடா ஹோல்டிங்ஸின் (UDA Holdings) நிர்வாகம் அல்லாத இயக்குநராக ஜெலெபு நாடாளுமன்ற உறுப்பினர் ஜலாலுதீன் அலியாஸ் நியமிப்பு கடிதமும் புழக்கத்தில் உள்ளது.

மற்றொரு கடிதத்தில், கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மான், இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய வீட்டுவசதி நிறுவனத்தின் (Syarikat Perumahan Negara Bhd) நிர்வாகம் அல்லாத இயக்குநராக நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மே 5 தேதியிட்ட அம்மூன்று கடிதங்களின் நகல்களையும் மலேசியாகினி கண்டது. நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸின் கையொப்பமும் அவைகளில் இருந்தது.

மே 18 நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக ஜி.எல்.சி நியமனங்கள் மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்மூன்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய நியமனங்களும் அதில் அடங்கும்.

நேற்று, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பிற நியமனங்களும் முறையே உறுதி செய்யப்பட்டன. அவற்றில், மஹ்த்சீர் காலித் (பாடாங் தெராப்) மற்றும் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் (பாசீர் சாலக்), முறையே தெனாகா நேஷனல் பெர்ஹாட் (Tenaga Nasional Berhad) மற்றும் பிராசாராணாவின் (Prasarana) தலைவராக நியமிக்கப்பட்டனர்.