கெடாவில் பாதிக்கும் மேற்பட்ட ஆதரவை இழந்துவிட்டார் முக்ரிஸ்- பாஸ்

பெர்சத்துவின் உச்ச கவுன்சில் (எம்.பி.டி) கூட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் கட்சி துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

டாக்டர் மகாதிர் மற்றும் முக்ரிஸுக்கு எதிராக ஓர் அரசியல் முயற்சி இருப்பதாக கட்சியின் வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன. இந்த சூழ்நிலையில் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பாக்காத்தானை விட்டு வெளியேறி அம்னோ, பாஸ், ஜிபிஎஸ் மற்றும் பிற சிறு கட்சிகளுடன் ஒரு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முகிதீனின் முடிவை மகாதீர் மற்றும் முக்ரிஸ் பகிரங்கமாக விமர்சித்ததை அடுத்து, அவ்விருவருக்கும் எதிராக செயல்பட முகிதீன் யாசின் அணிக்கு ஒரு வலுவான காரணம் இருப்பதாக அறியப்படுகிறது.

டாக்டர் மகாதீரின் ஆதரவு முகாமில் இருக்கும் அபூ பக்கார் யஹ்யா, இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பெர்சத்து உச்ச கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், துன் (டாக்டர் மகாதீர்) மற்றும் முக்ரீஸ் அழைக்கப்படவில்லை.”

“கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் பதிவி நீக்குவதற்கான நிகழ்ச்சி நிரல் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியாகினி கண்ட அந்த அழைப்பிதழில், கூட்டம் நாளை மதியம் மலாயா பழைய மாணவர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மகாதீரின் முகாமுக்கு நெருக்கமான பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வட்டாரம், லங்காவி எம்.பி.யுமான டாக்டர் மகாதீர் இந்த நடவடிக்கை குறித்து அறிந்திருப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அவர்கள் உண்மையிலேயே அவ்வாறு செய்தால், (மகாதிர் மற்றும் முக்ரிஸை பதவி நீக்கம் செய்வது), அந்த இரு தலைவர்களுக்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பளிக்காமல் அவ்வாறு செய்வது நியாயமற்றது மற்றும் பைத்தியக்காரத்தனமானது” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

முக்ரிஸ் மகாதீரை கெடாவின் மந்திரி புசார் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு அரசியல் திட்டத்திற்கு மத்தியில் மகாதீர் மற்றும் முக்ரிஸ் மீதான இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஊகங்கள் தோன்றுகின்றன.

முன்னதாக இன்று, கெடாவில் உள்ள பாஸ் மற்றும் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸை மந்திரி புசாராக நீக்கி அவருக்கு பதில் சாத்தியமான வேட்பாளரை நியமிப்பது குறித்து சந்தித்தனர்.

மே 7ம் தேதி மாநில பாஸ் ஆணையர், கெடாவில் அரசாங்கத்தின் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்று கூறியதை அடுத்து கெடாவில் இந்த அரசியல் நடவடிக்கைகள் நிகழ்கின்றன.

கெடா மாநிலத்தில் உள்ள பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களிடையே முக்ரிஸ் இப்போது பாதிக்கும் மேற்பட்ட ஆதரவை இழந்துவிட்டதாக பாஸ் கூறுகிறது.