டிஏபி கட்சி அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தால், அது மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்று பல மலாய்க்காரர்கள் நம்புவது மிகவும் வெட்கமாக உள்ளது.
ஆம். மலாய்க்காரர்களுக்கு பல பலவீனங்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் வணிகத்திலும் நிறுவனத்திலும் சிறந்து விளங்கவில்லை. போதைப்பொருள், குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஏராளமான ஏழை மலாய்க்காரர்களை நாம் காண்கிறோம். சிறையிலும், மலாய் கைதிகள் பலர் உள்ளனர்.
ஆனால் ஓர் அரசியல் கட்சி அவர்களை அழிக்க கூடிய அளவுக்கு மலாய்க்காரர்கள் பலவீனமடைந்தவர்களா?
ஆம். நாம் முன்பு ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டோம். ஆனால் இந்தியாவைப் போன்ற பெரிய நாடும் கூட ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. மலாக்கா போர்த்துகீசியர்களிடமும் பின்னர் டச்சுக்காரர்களிடமும் விழுந்தது. ஆனால் மலாய் மாநிலங்கள் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை.
நிர்வாகத் துறையில் ஆலோசனைக்காக நாம் பிரிட்டிஷாரை அழைத்தோம். ஆனால் மற்ற இடங்களைப் போலவே, நாமும் அவர்களின் காலனித்துவம் போல், ஆங்கிலேயர்கள் நம் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் மலாயாவுக்குத் திரும்பி, மலாய் மாநிலங்களை கைப்பற்றத் திட்டமிட்டனர். வைட்ஹால் லண்டனில் இருந்து நேரடியாக நிர்வகிக்கப்படும் ஒரு மலாயன் யூனியனை அமைக்க அவர்கள் விரும்பினர்.
ஆட்சியாளர்கள் இஸ்லாமிய மதம் மற்றும் மலாய் பழக்கவழக்கங்களின் நிர்வாகிகளாக மட்டுமே இருப்பர். மலாய் ஆட்சியாளர்கள் தங்கள் நிலங்களை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க மேக் மைக்கேல் கட்டாயப்படுத்தினார்.
மலாய்க்காரர்களுடன் எந்த கலந்தாலோசனையும் இல்லை. ஆனால் நமக்குத் தெரியும், மலாய்க்காரர்கள் மலாயன் யூனியனை எதிர்த்தார்கள். போரை வென்ற ஒரு புதிய உலக சக்தி – மலாய்க்காரர்களுக்கு தலைவணங்க வேண்டியிருந்தது. மலையன் யூனியன் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
பாலஸ்தீனியத்தை யூதர்களுக்கு வழங்கியதை போல் ஆங்கிலேயர்கள் மலாய் மாநிலங்களை கைப்பற்றுவது எளிது என்று நினைத்தனர். மலாய் மாநிலங்களை கைப்பற்றும் முயற்சியும், மலாய் இனத்தை அழிக்கும் முயற்சியும் தோல்வியடைந்தது. மலாய்க்காரர்கள் எதிர்த்ததால் தோல்வியுற்றது.
ஒருவேளை இப்போது மலாய்க்காரர்கள் கோழையாக இருக்கிறார்கள். ஆனால் முன்புள்ள மலாய்க்காரர்கள் தைரியமானவர்கள். மலையன் யூனியன் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலாய்க்காரர்கள் சுதந்திரத்தை கோரினர். 1957-இல் மலாய் இளைஞர்கள் சுதந்திரத்திற்காக போராடினர். சுதந்திரத்தை 1959-இல் வழங்க ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர்.
மலாய்க்காரர்கள் அதை மறுத்து 1957-இல் சுதந்திரத்தைக் கோரினர். 1957 சுதந்திர ஆண்டாக மாறியது. பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால் மலாய்க்காரர்கள் மறுத்துவிட்டனர்.
மலேசியாவின் அனுமதியின்றி பிரிட்டிஷ் கான்கார்ட் விமானம் இங்கு பறந்தபோது, மலாய் தலைமையிலான அரசாங்கம் “Buy British Last” கொள்கையை அறிமுகப்படுத்தியது. உலகில் எந்த நாட்டிலும் செய்யப்படாத “Dawn Raid” மூலம் பிரிட்டிஷ் கத்ரி நிறுவனத்தை வாங்கினோம்.
மலாய் தலைவர்கள் உத்தரவின்படி அனைத்து காலனித்துவ நிறுவனங்களையும் மலேசியா வாங்கியது.
மற்ற பெரிய சக்திகளுக்கும் இது பொருந்தும். வழக்கமாக உலகின் ஒரு சிறிய நாட்டின் ஒவ்வொரு புதிய தலைவரும், நியமிக்கப்படும்போது, அமெரிக்காவின் அதிபரை சென்று சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்.
நாம் அப்படி இல்லை. 1981-ல் பிரதமரான மலேசிய பிரதமர், பதவியேற்ற பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமெரிக்கா சென்றார். அமெரிக்க தூதர் பல முறை முயற்சித்த போதிலும் அவர் உடனடியாக செல்லவில்லை.
பெரும் வல்லரசுகள் ஏழை நாடுகளுக்கு அநீதி இழைக்கும் போது மலேசிய மலாய் தலைவர்கள் அடிக்கடி அவர்களை விமர்சிக்கிறார்கள். இஸ்ரேலில் துஷ்பிரயோகம் செய்யும் பெரும் சக்தியை கேள்வி கேட்பதில் மலாய்க்கார தலைவர்களின் குரல் தான் ஓங்கி கேட்டது.
நாணய வர்த்தகர்கள் மலாய் தலைமையிலான அரசாங்கத்தை அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் பிச்சை எடுக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன.
மலேசியா பொருளாதாரத்தை தங்களுக்கு கீழ் வைத்தால் இந்த நிருவனங்கள் கடன்களை வழங்குவதாக கூறின.
நாம் மறுத்தோம். ரிங்கிட்டின் மதிப்புக் குறைப்பின் சிக்கலைத் தீர்ப்பதற்கான சொந்த வழியை நாம் உருவாக்கினோம். உலகளாவிய நிதி வல்லுநர்கள் கூட நாம் திவாலாகி விடுவோம் என்றனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.
மலேசியா மலாய்க்காரர்களின் தலைமையில் இருந்தாலும், நிர்வாக இயந்திரங்கள் மலாய்க்காரர்கள் என்றாலும் நாம் விரைவாக மீண்டோம்.
மேலும் மலாய்க்காரர்கள் எளிதில் அழிக்கப்படுவோர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டும் இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன.
ஆனால் மலாய்க்காரர்கள் அழிந்து போக முடியும். கொள்ளைக்காரர்களை தங்கள் தலைவராக அனுமதித்தால் மலாய்க்காரர்கள் அழிக்கப்படுவார்கள். அத்தகைய தலைவர்கள் – மலாய்க்காரர்கள் என்றாலும் – மலாய்க்காரர்களை அழிப்பார்கள்.
மலாய்க்காரர்களின் நலன்களை பாதுகாக்க நாம் ஒரு மலாய் கட்சியை துவங்கினோம். கட்சி வெற்றி பெற்றது. வெற்றிகரமாக ஆங்கிலேயர்களை தோற்கடித்து, சுதந்திரம் அடைந்து, நாட்டை அபிவிருத்தி செய்து ஆசிய புலியாக மாறியது.
இந்த கட்சி ஒருபோதும் தோற்றதில்லை. ஆனால், மே 9, 2018 அன்று இந்த கட்சி தோற்றது.
ஏன்? ஏனெனில் இந்த மாபெரும் கட்சிக்கு ஒரு கொள்ளைக்காரன் தலைவராக கிடைத்ததனால் தான். இந்தத் தலைவர் என்ன செய்தார் என்பதைப் நான் சொல்ல வேண்டியதில்லை. ஒரு மரியாதைக்குரிய நாட்டிலிருந்து, ஒரு கிளெப்டோக்ராசியாக மாறியது – திருடர்களால் ஆளப்படும் நாடாக மாறியது.
இந்த கட்சியின் உறுப்பினர்கள் ஊழல் செய்யத் தயாராக இருப்பதாலும், மலாய்க்காரர்களின் போராட்டத்திற்கு இனி முன்னுரிமை கொடுக்காததாலும் கட்சி அழிந்தது.
எனவே மலாய்க்காரர்கள் தூண்டிவிடப்படுவதால் சிலர் டிஏபிக்கு மிகவும் பயப்படுகிறார்கள். மலாய்க்காரர்களும், மலாய் அரசாங்கமும் பெரும் வல்லரசு ஆங்கிலேயருக்கும், அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக்கு எதிராகப் போராடத் துணிந்தன. ஆனால் இப்போது டிஏபிக்கு அஞ்சுகின்றன. டிஏபியால் நசுக்கப்படுவதாக பயப்படுகின்றனர். குவான் எங்கை கண்டு நடுங்குகின்றனர்.
மலாய்க்காரர்கள் குவான் எங்கை கண்டு பயப்படுகிறார்கள்.
இந்த கோழைத்தனம் எங்கிருந்து வந்தது? யாரிடமிருந்து பாதுகாப்பு பெற விரும்புகிறீர்கள்? நஜிப்பிடமிருந்தா? ஒரு கொள்ளைக்கார மலாய் முஸ்லிம் தலைவர் அரசிடமிருந்தா?
சிலர், குற்றவாளியாக இருந்தாலும் கூட, அவர் மலாய்க்காரர் என்கிறார்கள். அவர் தனது பதவியில் இருந்த போது, மலாய்க்காரர்களுக்கு பாதுகாப்பளித்தாரா? மலாய்க்காரர்களை பாதுகாத்ததனால் தான் அவர் தோற்றாரா?
நீங்களே உங்களை கேட்டுகொள்ளுங்கள். டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவது மலாய்க்காரர்களை பாதுகாக்கும் விதமா?
மலாய் இளைஞர்கள் முன்பு ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். பயமில்லை. நஜிப்பை ஆதரிக்கும் இளைஞர்கள் நஜிப்பிடம் பாதுகாப்பு கோருகிறார்கள். கோழை ஆகிவிட்டீர்களா?
நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.
டிஏபிக்கு மிகவும் பயந்த மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கு துரோகம் இழைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
மலாய்க்காரர்களை அழிக்க டிஏபி தேவையில்லை. ஆனால் கொள்ளைக்காரரை தலைவராக தேர்வு செய்வதனால் அவர்கள் (மலாய்க்காரர்கள்) அழிக்கப்படுவார்கள்.
டாக்டர் மகாதீர் முகமட், பெர்சத்து கட்சித் தலைவர், லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஆவார். இந்தக் கருத்து அவரின் சொந்த கருத்து, மற்றும் மலேசியாகினியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.