அஸ்மின்: இந்த மாத இறுதியில் பொருளாதார மீட்பு திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கும்

கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதாரத்தை புதுப்பிக்க ஆறு மாத பொருளாதார மீட்பு திட்டத்தை இந்த மாத இறுதியில் அரசாங்கம் அறிவிக்கும்.

இந்த தொற்றுநோய் மலேசியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளை பாதித்துள்ளதாக அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

“வணிகங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருந்தது, வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்துள்ளது. மற்ற பொருளாதாரத்தைப் போலவே, அதன் தாக்கத்தை குறைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று கோலாலம்பூரில் இன்று அவர் கூறினார்.

கோவிட்-19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் மின்னியல் மற்றும் மின்னணு (Electrics & Electronics) ஆகியவை RM7.28 பில்லியன் இழப்பு அடைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி இழப்புகள் RM29.12 பில்லியனாக இருக்கும் என்று அஸ்மின் கூறினார்.

உள்ளூர் மின்னியல் மற்றும் மின்னணு உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாகும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் பெரும் பங்களிப்பைத் தருகிறது.

பொருளாதாரத்தில் தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்காக, கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.

“இது வேலைகளை உருவாக்கும், தொழில்துறை தரமான சுகாதார இயக்க நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும்.”

“நமது முன் வரிசைப் பணியாளர்களின் மாபெரும் முயற்சியின் விளைவாக இதுவரை நாம் கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

தங்களின் வணிகங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதை துரிதப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக தற்போதைய சவால்களை முன்னோடியாக எடுத்துக்கொள்ளுமாறு வணிகங்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அஸ்மின் அழைப்பு விடுத்தார்.

“டிஜிட்டல் மயமாக்கல் என்பது வெற்றிபெற்ற ஒரு திட்டமாகும் (குறிப்பாக வணிகத்தில்) என்பதை கோவிட்-19 சான்றாக்கியுள்ளது.”

“டிஜிட்டல் மயமாக்கலில், எதிர்காலத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.