கெடா தேசிய கூட்டணி (பி.என்) தற்போது மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உட்பட 23 கையெழுத்திடப்பட்ட உறுதிமொழிகள் (statutory declaration) தயாராக உள்ளன.
பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து மாநில அரசைக் கைப்பற்றுவதற்கான அடுத்த கட்டத்திற்காக அவர்கள் காத்திருப்பதாக கெடா பாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
“நான்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து 23 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே உறுதிமொழிகளில் கையெழுத்திட்டுள்ளனர்.”
“இப்போது மாநில அரசின் பிரதிநிதி தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அரசரைப் பார்க்க காத்திருக்கிறோம்” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று செய்தி ஊடகம், கெடாவின் பெரிக்காத்தான் கூட்டணி கெடாவைக் கைப்பற்றுவதற்கு போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறியது, இதனால் முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான பாக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததாகவும் கூறியது.
கட்சியை விட்டு வெளியேறிய இரண்டு பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர்கள் முகிதீன் யாசின் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பதை தொடர்ந்து அந்த அறிவிப்பு நிகழ்ந்தது.
சில கெடா பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாஸ் தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், அரண்மனை உட்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், தானே இன்னும் கெடா மந்திரி புசார் பதவியை வகிப்பதாக முக்ரிஸ் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆயேர் ஹாங்காட் சட்டமன்ற உறுப்பினர் ஜுஹாரி பூலாட்டை தொடர்பு கொண்டபோது, கெடாவில் பி.என். அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
“கையெழுத்திட சில பாஸ் நபர்கள் என்னை தொடர்பு கொண்டனர், ஆனால் தற்போது நான் கோலாலம்பூரில் இருக்கிறேன்.”
“ஆனால் புதிய மாநில அரசாங்கத்தை ஆதரிப்பதாக நான் உத்தரவாதம் அளித்துள்ளேன். கட்சியின் முடிவை நாங்கள் பின்பற்றுவதே இதற்குக் காரணம்” என்று அவர் கூறினார்.
இதுவரை, ஜுஹாரி உட்பட, மற்ற இரண்டு கெடா சட்டமன்ற உறுப்பினர்களும் (குவா மற்றும் புக்கிட் காயு ஹீத்தாம்) பி.என். அரசாங்கத்தை அமைப்பதற்குத் தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பி.என். கெடா அரசாங்கம், 15 பாஸ், இரண்டு பாரிசான், இரண்டு முன்னாள் பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.