ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக பிளவு பட வேண்டாம் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் அறிவுறுத்தினார்.
தேசிய கூட்டணி தலைமையில் புதிய மாநில அரசாங்கக் கட்சி, மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கும் இடையே விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவரது ஆலோசனை இருந்தது.
“அரசியல் சுயநலத்திற்காக சண்டையிட வேண்டிய நேரம் இதுவல்ல. இதுபோன்ற நடவடிக்கைகள் வேற்றுமை என்ற மிகவும் ஆபத்தான கிருமியை பரப்பும்” என்று சுல்தான் இப்ராஹிம் இன்று காலை கூறினார்.
அரசியல் தலைவர்களிடையே இந்த கிருமி ஏற்கனவே பரவியுள்ளது என்று சுல்தான் இப்ராஹிம் மேலும் கூறினார்.
முன்னதாக, மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹைசன் கயாத்தை நீக்க பி.என் தரப்பு நடவடிக்கை எடுக்கும் என்று வதந்தி பரவியது. அதே நேரத்தில் ஜொகூர் மந்திரி புசார் ஹஸ்னி முகமது மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாக்காத்தான் தரப்பினர் முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.
“அதிகாரப் போராட்டங்களுக்கும், அரசியல் கொந்தளிப்புக்கும் முகங்கொடுத்தால், அது மக்களைப் பாதிக்கும், அமைதியின்மையை உண்டாக்கும், அரசியல் மற்றும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்.”
“இந்த கிருமியினால் பாதிக்கப்பட்டவர், தன்னையே மறந்து விடுவார், மக்களின் நலன்களை மறந்துவிடுவார். சுயநலமாக, தனக்கு தேவையானது கிடைக்கும் வரை தேடிச் செல்வார்.”
“இக்கிருமி இலவசமாக சமூக ஊடகங்களின் மூலம் எளிதில் பரவுகிறது. ஊடக முகவர்கள் மற்றும் இணையத்தில் விசைப்பலகை வீரர்கள் இதற்கு உதவுகிறார்கள். பரபரப்பான பிரச்சினைகளை எழுப்புவதற்கு ஊக்கியாக இருந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே வெறுப்பைத் தூண்ட இவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.