கோழி, காய்கறிகளின் விலை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பு

தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தவறியதாகவும், இதனால் கோழி மற்றும் காய்கறிகளின் விலை அளவுக்கு அதிகமாக உயர காரணமாக அமைந்ததாகவும் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் கூறினார்.

உதாரணமாக, கிளந்தான் கோத்தா பாருவில், கோழி விலை முன்பு ஒரு கிலோவுக்கு RM3 இருந்து இப்போது ஒரு கிலோ RM7 எட்டியுள்ளது. அதே நேரத்தில் கெடாவில், மிளகாய், தக்காளி, பீன்ஸ் மற்றும் சூப் இலைகள் போன்ற காய்கறிகளின் விலையும் அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேராக் மற்றும் சிலாங்கூரில் இதே போன்ற நிலைமைகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் தீவிர அணுகுமுறை இன்மை குறித்து ஏப்ரல் மாதத்திலேயே எச்சரித்துள்ளார் லீ. RM1 பில்லியன் உணவு பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்துவதற்கான திட்டம் இல்லாதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது விநியோகப் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் தவறியதால், விவசாயிகள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியதாயிற்று. இன்று, காய்கறிகளுக்கான தேவை இன்னும் அப்படியே தான் உள்ளது. பண்டிகை காலத்தில் தேவை இன்னும் அதிகரிக்கும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரியில், கேமரன் மலையில் விவசாய நிலங்களின் வாடகை செலவு 500 சதவீதம் அதிகரித்தாகவும், இது விவசாயிகள் மீது சுமையை அதிகரித்து, மறைமுகமாக காய்கறிகளின் அதிக விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மக்களில் பலர் இப்போது வேலைகளை இழந்து அல்லது ஊதியங்கள் குறைக்கப்பட்டதன் விளைவாக, வாங்கும் திறன் குறைந்து வருவதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான 72 உணவு உற்பத்தி தோட்டம் (Taman Kekal Pengeluaran Makanan (TKPM) தளங்களின் செயல்திறனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் லீ வலியுறுத்தினார்.

உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் துறையின் (KPDNHEP) துணை அமைச்சர் ரோசோல் வாஹித், மக்கள் கோழி வாங்குவதை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அதை எங்கு வாங்குவது என்பதைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

“எனது ஆலோசனை என்னவென்றால், மலிவான பொருட்களைப் பெறக்கூடிய இடத்தைத் தேர்வு செய்யுங்கள். அப்படிப்பட்ட இடங்கள் நிச்சயமாக உள்ளன. நானே அவற்றைச் சோதித்தேன்,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

முன்னதாக, சில மாநிலங்களில் கோழி விலை உயர்ந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, கிளந்தானில் ஒரு கிலோ கோழி RM3 – RM7 வரையிலும், ஜொகூரில் ஒரு கிலோ RM6.50 – RM8.50 வரையிலும்; சிலாங்கூரில் ஒரு கிலோ RM4.60 – RM9 வரையிலும்; மற்றும் திரெங்கானுவில் ஒரு கிலோ RM9.60 வரையிலும் உள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரிப்பதை தவிர்ப்பதை உறுதி செய்ய, பண்டிகை காலத்திற்கான விலைக் கட்டுப்பாட்டு பட்டியலை KPDNHEP இன்று அறிவிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.