15-வது பொதுத்தேர்தல் வரை பி.என் அரசாங்கம் நிலைக்காது – அன்வார்

சமீபத்தில் பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவருவதற்கான முயற்சி சாத்தியமற்று போன நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமட்டின் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெறும் என பி.என் அரசாங்கம் “பயப்படுவதாக” அன்வார் கூறினார். நேற்று நாடாளுமன்ற அமர்வை மட்டுப்படுத்திய நடவடிக்கையில் இது காணப்படுகிறது என்றார்.

“தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்ற நம்பிக்கை இருந்தால், அவர்கள் வழக்கம் போல் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

“நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெற்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முகிதீனுக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக நேற்றைய அமர்வின் இருக்கைகள் காட்டின. இருப்பினும் ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசீர் குஜாத் பின்னர் தான் இன்னும் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக விளக்கினார்.

இந்த திட்டம் வெற்றிபெற்றால் அவர் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, அன்வார், இப்போது எதிர்க்கட்சியை வலுப்படுத்த செயல்படுவதாகவும் சீர்திருத்த முயற்சிகளில் தீவிரமாக இருப்பதாகவும் கூறினார்.