கோவிட்-19: 31 புதிய பாதிப்புகள், 60 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் மேலும் 31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,009 ஆக உள்ளது.

மதியம் நிலவரப்படி, மேலும் 60 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது நோயில் இருந்து மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,706 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 81.4 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது.

குணப்படுத்தப்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,189 ஆக உள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில் 10 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 21 உள்ளூர் பாதிப்புகள் அடங்கும் என்றார்.

மொத்த உள்ளூர் தொற்றுநோய்களில், 10 பாதிப்புகள் வெளிநாட்டினரும், 11 பாதிப்புகள் மலேசிய குடிமக்களும் சம்பந்தப்பட்டவை ஆகும்.

மொத்தம் 11 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஏழு நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மலேசியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் புதிய இறப்புகள் எதுவும் இல்லை என்றும், இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 114 உள்ளது என்றும் நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார்.